Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 42)

Paththati 3 - ப்ரபாவ பத்ததி

தத் விஷ்ணோ: பரமம் பதத்ர யுகளம் த்ரயந்த பர்யந்தகம் சிந்தாதீத விபூதிகம் விதரது ச்ரேயாம்ஸி பூயாம்ஸி ந: யத் விக்ராந்திதசா ஸமுத்தித பத ப்ரஸ்யந்தி பாதஸ்விநீ ஸக்யேநேவ ஸதா நதஸ்ய தநுதே மௌளௌ ஸ்திதிம் சூலிந:

"தத் விஷ்ணோ : பரமம் பதம்" என்று உபநிஷத்துக்கள் பாதுகையின் மேன்மையைக் கூறுகின்றன. இப்படியாக உயர்ந்த ஐச்வர்யம் உடைய ஸ்ரீரங்கநாதனின் பாதுகைகள் நமக்கு உயர்ந்த நன்மைகளை ஏற்படுத்தவேண்டும். நம்பெருமாள் த்ரிவிக்கிரமனாக நின்றபோது, அவன் திருவடிகளில் இருந்து பெருகிய கங்கையுடன் பாதுகை தொடர்புடையதாக ஆனது. அப்போதிலிருந்து கங்கை எவ்வாறு சிவனின் தலையில் எப்போதும் உள்ளதோ, அதுபோன்று பாதுகையும் சிவனின் தலையில் உள்ளது.

சிவனின் தலையில் உள்ள இரண்டு பொருள்கள் குறித்துக் கூறினார். அவை கங்கையும் பாதுகையும் என்றார். இரண்டுமே எம்பெருமானின் திருவடிகளுடன் தொடர்பு கொண்டவையாகும். ஒன்று (கங்கை) த்ரிவிக்ரமனாக நம்பெருமாள் நின்றபோது அவனுடைய திருவடிகளின் தொடர்பு அடைந்தது. மற்றொன்று அவனது திருவடிகளில் எப்போதும் இருப்பதால், அவன் திருவடிகளின் தொடர்பு பெற்றது.