Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 40)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
வந்தே தத் மதுகைடப ஆரிபதயோ: மித்ரம் பதத்ரத்வயம் யத்தத் பக்தி பராநதேந சிரஸா யத்ர க்வசித் பிப்ரதி த்வித்ர ப்ரஹ்ம விநாடிகா அவதி பத வ்யத்யாஸ சங்காபர த்ராஸ உத்கம்பதசா விஸம்ஸ்துல த்ருதி: த்ரைவிஷ்டபானாம் கண:
மது, கைடபன் என்னும் அசுரர்களுக்குச் சத்ருவாக உள்ள நம்பெருமாளின் திருவடிகளுக்குப் பாதுகைகள் மிகவும் பொருத்தமான ஸ்நேகத்துடன் உள்ளன. இப்படியாக அந்தத் திருவடிகளை அவை காப்பாற்றுகின்றன. அந்தப் பாதுகைகளை நான் வணங்குகிறேன். இவற்றின் மற்றொரு பெருமை என்னவெனில் - ஒருவன் மிகுந்த பக்தியுடன் அந்தப் பாதுகைகளைத் தனது தலையில் ஏற்கும்போது, ப்ரம்மனின் இரண்டு மூன்று விநாடிகள் மட்டுமே பதவியில் உள்ள தேவதைகள், தங்கள் பதவிக்கு இவனால் (பாதுகையைத் தலையில் ஏற்பவன்) ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சி நடுங்குகின்றனர்.
நமது ஒரு வருடம் என்பது தேவர்களின் ஒரு நாள் ஆகும். தேவர்களின் ஆயிரம் சதுர்யுகங்கள் ப்ரம்மனின் ஒரு பகல் ஆகும். ஒரு பகலில் 14 மன்வந்தரங்கள் ஏற்படும். ஒவ்வொரு மன்வந்தரமும் ப்ரம்மனின் இரண்டு மூன்று நாழிகைகளுக்கு மட்டுமே சமமாகும். இந்த ஒவ்வொரு மன்வந்தரத்திலும் தேவர்களின் பதவிகள் மாற்றம் அடையும். இவ்வாறு அற்பகாலமே உள்ள தங்கள் பதவிக்கு, பாதுகையைத் தலையில் ஏற்பவன் மூலம் ஆபத்து வருமோ என்று தேவர்கள் நடுங்குவார்கள்.