Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 36)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
திஷ்டந்து ச்ருத: ததோபி மஹிதம் ஜாகர்த்தி தத் பாதுகே தத் தாத்ருக் ப்ரதநாய தாவக குண க்ரமாய ராமாயணம் யஸ்ய ஆஸீத் அரவிந்த ஸம்பவ வதூ மஞ்ஜீர சிஞ்ஜாரவ ஸ்பர்த்தா துர்த்தர பாதபத்த பணிதி: வல்மீக ஜந்மா கவி:
ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! வேதங்கள் உன்னைப் பற்றி உயர்வாகக் கூறுவது இருக்கட்டும் . ஆயினும் அந்த வேதங்களைக் காட்டிலும் அனைவராலும் கொண்டாடப்படும் இராமாயணம் உனது குணங்களையும் மேன்மையையும் வெளிப்படுத்தியபடி உள்ளது. இந்த உலகில் உள்ள புற்றில் இருந்து வெளி வந்த வால்மீகி மஹரிஷி, இத்தகைய இராமாயணத்தை எவ்விதம் இயற்றினார்? தாமரை மலரில் அமர்ந்துள்ள ப்ரம்மனின் தேவியான ஸரஸ்வதியின் கால் சிலம்புகளின் ஒலி மூலம் ஏற்பட்ட ஒசைகளே இவரது வாயில் இருந்து, இராமாயணச் சொற்களாகப் புறப்பட்டன அல்லவா?
இராமனைக் குறித்த த்யானத்தில் அமர்ந்த வால்மீகி, அந்தத் த்யானத்தில் மூழ்கி புற்றாகவே இருந்தார். பின்னர் த்யானம் முடிந்து எழுந்து, தான் பெற்ற இராம அனுபவத்தை உலகிற்கு உணர்த்தினார்.அந்த வேளையில் ப்ரம்மனின் அனுக்ரஹம் பெற்றவராதலால், ஸரஸ்வதியின் க்ருபைக்குப் பாத்திரமானர். இராமாயணத்தின் ஒவ்வொரு நிகழ்விற்குத் தகுந்தபடி அவள் ஆடிக் காண்பிக்க, அவளது க்ருபையால் இவரது வாயிலிருந்து சொற்கள் ப்ரவாஹமாக வந்தன.