Sri Paduka Sahasram - Paththati 3 - ப்ரபாவ பத்ததி (ச்லோகம் 32)
Paththati 3 - ப்ரபாவ பத்ததி
நிச்சேஷம் அம்பரதலம் யதி பத்ரிகா ஸ்யாத் ஸப்த அர்ணவீ யதி ஸமேத்ய மஷீ பவித்ரீ வக்தா ஸஹஸ்ரவதந: புருஷ ஸ்வயம் சேத் லிக்யேத ரங்கபதி பாதுகயோ: ப்ரபாவ:
பாதுகையின் பெருமைகளை எழுத இயலும் - எப்படி? ஆகாயம் முழுவதுமாகச் சேர்ந்து பெரியதொரு காகிதமாக இருந்தல் வேண்டும். ஏழு கடலும் இணைந்து, எழுதும் மையாக மாற வேண்டும். எழுதுபவனாக ஆயிரம் தலைகளுடன் கூடிய பரமபுருஷனாகிய ஸ்ரீரங்கநாதனே இருக்க வேண்டும். இப்படி என்றால் - பாதுகையின் பெருமைகளை ஏதோ ஒரு சிறிய அளவு எழுதி முடிக்க இயலும்.
இங்கு ஸ்வயம் என்ற பதம் காண்க. இதன் பொருள் “தானாகவே” என்பதாகும். ஒரு செயலை மற்றவர்கள் கூறிச் செய்வதை விட நாமாகவே செய்தால் ஈடுபாடு அதிகம் அல்லவா? அது போன்று இங்கு திருவரங்கன் தானாகவே ஈடுபாட்டுடன் முயன்றால் மட்டுமே பாதுகைகளின் முழுப் பெருமைகளும் அவனுக்கும் பிடிபடும் என்றார். மேலும் லிக்யேத என்ற பதம் “எழுதப்படலாம்” என்று ஐயத்துடன் கூறுவதைக் காண்க.