Sri Paduka Sahasram - Paththati 2 - ஸாமாக்ய பத்ததி (ச்லோகம் 24)
Paththati 2 - ஸாமாக்ய பத்ததி
முநிநா மணிபாதுகே த்வயா ச ப்ரதிதாப்யாம் சடகோப ஸம்ஜ்ஞயைவ த்விதயம் ஸகல உபஜீவ்யம் ஆஸீத் ப்ரதமேந ச்ருதி: அந்யத: தத் அர்த்த:
இரத்தினக் கற்களல் இழைக்கப்பட்ட பாதுகையே! சடகோபன் என்ற பெயர் பெற்ற நம்மாழ்வாரும் நீயும் ஒரே போன்ற செயல்களைச் செய்தீர்கள். அது என்ன? அனைவருக்கும் பயன்படக் கூடிய செயலாகும். நம்மாழ்வார் செய்தது வேதங்கள் அனைத்தையும் தமிழில் உரைத்து அனைவராலும் ஓதக் கூடியபடி செய்தார். நீ செய்தது - வேதத்தின் பொருளான நம்பெருமாளை அனைவரும் வணங்கும்படி உன் மீது எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வருகிறாய்.
வேதம் ஓத வேண்டுமானால் உபநயனம் ஆகியிருக்க வேண்டும், மூன்று வர்ணத்தினராக இருத்தல் வேண்டும், புருஷர்களாக இருக்க வேண்டும் - என்று பல நிபந்தனைகள் உள்ளன. ஆனால் நம்மாழ்வார், வேதங்களில் உள்ள விஷயங்களைத் தமிழ்ப்படுத்தி, திருவாய்மொழியான அதனை அனைவரும் ஓதலாம்படிச் செய்தார். நம்பெருமாளைச் சேவிக்க வேண்டுமானால் கோயிலுக்குச் செல்லவேண்டும். சிலரால், சில காரணங்களால் கோயிலுக்குச் செல்ல இயலாமல் இருக்கும். நம்பெருமாளைக் காண இயலவில்லையே என இவர்கள் மனம் வருந்தக்கூடும். ஆனால் பாதுகையாகிய நீ, நம்பெருமாளை உன் மீது எழுந்தருளச் செய்து, கோயிலுக்கு வெளியில் உள்ள திருவீதிகளில் அவனைச் சஞ்சாரம் செய்ய வைக்கிறாய். இதன் மூலம் அனைவரும் அவனைக் காணும்படிச் செய்கிறாய்.வேதங்களைத் தமிழில் செய்து, அனைவரும் பயனடையும்படி ஆழ்வார் செய்தார். அந்த வேதநாதனை நீ கோயிலுக்கு வெளியில் கொணர்ந்து, அனைவரும் பயனடையும்படிச் செய்கிறாய்.