Sri Paduka Sahasram - Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி (ச்லோகம் 19)

Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி

அநுக்ருத நிஜநாதாம் ஸூக்திம் ஆபாதயந்தீ மநஸி வசஸி ச த்வம் ஸாவதாநா மம ஸ்யா: நிசமயதி யதா அஸௌ நித்ரயா தூரமுக்த: பரிஷதி ஸஹ லக்ஷ்ம்யா பாதுகே ரங்கநாத:

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! எனது மனதிலும் வாக்கிலும் சொற்கள் எப்படி வரவேண்டும் என்றால் - உனது ஒலியானது, தான் (நம்பெருமாள்) நடக்கும் போது எத்தனை இனிமையாக உள்ளது என்று ஸ்ரீரங்கநாதன் நினைத்துக் கொள்வானோ அதுபோல் இருக்கவேண்டும். இவ்விதம் உனது நாதத்தை என் மூலம் நீ வெளிப்படுத்தவேண்டும். இதன் சுவாரஸ்யத்தில் அவன் மயங்கி, ஸ்ரீரங்கநாச்சியாருடன் விழித்திருந்து நான் கூறும் இவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பான். ஆகவே எனது வாக்குகள் அவனுக்கு இன்பமாக இருத்தல் வேண்டும்.

ஸ்வாமி தேசிகர் பாதுகையிடம், “இந்தச் ச்லோகங்களை நீ மட்டும், இங்கு உள்ளவர்கள் மட்டும் கேட்டால் போதாது. நம்பெருமாள் அவனுடைய நாயகியான ஸ்ரீரங்கநாச்சியாருடன் எழுந்தருளியிருந்து கேட்டு மகிழ வேண்டும்”, என்றார். உடனே பாதுகை, “அதற்கு என்னிடமிருந்து நீவிர் என்ன எதிர்பார்க்கிறீர்?”, என்றாள். ஸ்வாமி உடனே வெகுசாமர்த்தியமாக, “நீ நடக்கும்போது உனது இனிமையான சப்தத்தில் நம்பெருமாள் மயங்கி விடுகிறான் அல்லவா? அந்த நாதத்தை எனது சொற்களுக்கு அளிப்பாயாக. அதன் மூலம் உறங்கச் சென்ற நம்பெருமாள், “நம்முடைய பாதுகையின் நாதம் போன்று உள்ளதே”, என்று விரைவாக இங்கு வருவான். இங்கு வந்தவன் ஸ்ரீரங்கநாச்சியாருடன் அமர்ந்து என்னுடைய ச்லோகங்களைக் கேட்டு ரசிப்பான். எனது சொற்கள் இரசிக்கும்படி இல்லையென்றால் அவன் மீண்டும் உறங்கச் சென்றுவிடுவான் அல்லவோ?”, என்றார்.