Sri Paduka Sahasram - Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி (ச்லோகம் 14)
Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி
ரங்கக்ஷ்மாபதி ரத்நபாது பவதீம் துஷ்டூஷத: மே ஜவாத் ஜ்ரும்பந்தாம் பவதீய சிஞ்ஜித ஸுதா ஸந்தோஹ ஸந்தேஹதா: ச்லாகா கூர்ணித சந்த்ரசேகர ஜடா ஜங்கால கங்காபய: த்ராஸாதேச விச்ருங்கல ப்ரஸரண உத்ஸிக்தா: ஸ்வயம் ஸூக்தய
உயர்ந்த கற்களால் இழைக்கப்பட்ட ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னைத் துதித்து கவி பாட வேண்டும என்ற ஆசை எனக்கு அதிகமாக உள்ளது. உனது நாயகனான ஸ்ரீரங்கநாதனின் மிக உயர்ந்த பக்தனான சிவபெருமான் தனது தலையை அசைக்கும்போது அவனது சடைமுடியில் மிகவும் வேகமாக ஓடிவரும் கங்கை நதியின் ஓசையானது, உன்னுடைய அமிர்தம் போன்ற இனிய நாதத்தைப் போன்று உள்ளது. அந்த கங்கை நதியானது, தான் ஓடிவரும் பாதையில் தனக்கு ஏதேனும் தடை வருமோ என்று அச்சம் கொள்ளாமல் கர்வத்துடன் ஓடிவருகிறது. அப்படி ஓடிவரும் கங்கை நீரின் வேகம் போன்று உன்னைப் பற்றிய சொற்கள் எனக்கு வர வேண்டும்.
வைஷ்ணவாநாம் யதா சம்பு: ஸ்ரோதாயாம் ஜாந்ஹவி யதா - சிவனை விட உயர்ந்த வைஷ்ணவர் வேறு யாரும் இல்லை. அப்படிப்பட்ட சிவனால் போற்றப்படும் பெருமாளின் பாதுகை என்றார். கங்கையின் வேகம் சிவனின் தலை அசைப்பால் மேலும் அதிகமாகிறது என்றார்.தன்னிடமிருந்து வெளிவரும் பாதுகைகள் பற்றிய கவிதைகள் கண்டு, அந்தச் சொற்கள் தடை ஏதும் இல்லாத தன்னையே தடுத்துவிடுமோ என கங்கை அஞ்சும்படியாக, கர்வத்துடன் சொற்கள் வெளிவரவேண்டும் என்றார் - இப்படியாகவும் கருத்து உரைக்கலாம்.