Sri Paduka Sahasram - Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி (ச்லோகம் 12)

Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி

மித ப்ரேக்ஷா லாபக்ஷண பரிணமத் பஞ்சஷபதா மத் உக்தி: த்வயி ஏஷா மஹித கவி ஸம்ரம்ப விஷயே ந கஸ்ய இயம் ஹாஸ்யா ஹரி சரணதாத்ரி க்ஷிதிதலே முஹு: வாத்யா தூதே முகபவந விஷ்பூர் ஜிதமிவ

ஸ்ரீ ஹரியான க்ருஷ்ணனின் பாதுகையே! அவனுடைய திருவடிகளைப் பாதுகாப்பவளே! உன்னுடைய தன்மைகளைப் பற்றி, பல உயர்ந்த கவிகள், உயர்த்தியாக ஸ்தோத்ரம் செய்யப்படுபவளாக நீ உள்ளாய். இப்படி இருக்கையில் என்னைப் போன்றவர்களின் ஸ்தோத்ரங்கள் அற்பமானவையே - காரணம் எனக்கு ஒரு நேரத்தில் ஐந்து அல்லது ஆறு பதங்கள் மட்டுமே தோன்றுகின்றன. இப்படி இருந்தாலும் நான் துதி செய்ய முயற்சிப்பது எப்படி உள்ளது என்றால் - பெரிய மரம் ஒன்றை வாய் மூலம் ஊதி அசைய வைப்பவனின் முயற்சி போன்றதாகும். வாய் மூலம் ஊதி மரத்தை அசைய வைப்பவனின் முயற்சி கண்டு உலகம் பரிகாசம் செய்வது போன்று, எனது கவிதையையும் கண்டு உலகம் பரிகாசம் செய்யாதோ?

ஒரு பெரிய மரமானது பலத்த காற்று வந்தால் கூட சிறிதே அசையும் தன்மை உடையது. அதனை ஒருவன் தனது வாயால் ஊதி அசைக்க முயன்றால் உலகம் அவனைக் கண்டு சிரிக்கும் அல்லவோ? இந்த முயற்சி போன்றே தன்னுடையதும் உள்ளது என்றார். இங்கு மேலும் ஒரு கருத்து உள்ளது. மரம் என்பதை ஸ்ரீரங்கநாதன் என்றும், காற்று என்பதை வேதங்கள் என்றும் கொள்ளலாம் . உயர்ந்த வேதங்கள் கூட அவனை நெருங்கி உணர இயலாமல் உள்ளபோது, அற்பமான தன்னால் இயலுமோ என்றார்.