Sri Paduka Sahasram - Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி (ச்லோகம் 11)

Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி

யத் ஏஷ: ஸ்தௌமி த்வாம் த்ரியுகசரணத்ராயிணி தத: மஹிம்ந: கா ஹாநி: தவ மம து ஸம்பந்நிரவதி: சுநா லீடா காமம் பவது ஸுரஸிந்து: பகவதீ தத் ஏஷ: கிம்பூதா ஸ து ஸபதி ஸந்தா பரஹித:

ஞானம், பலம், சக்தி, தேஜஸ், ஐச்வர்யம், வீர்யம் என்ற ஆறு குணங்களுடன் கூடிய நம்பெருமாளின் திருவடிகளைப் பாதுகாக்கும் பாதுகையே! அற்பனான நான் உன்னைத் துதித்து ஸ்தோத்திரம் இயற்றினால் உனது மேன்மைக்கு குறைவு ஏதும் உண்டாகப் போவதில்லை. ஆனால் அதன் மூலம் எனக்கு எல்லையற்ற நன்மைகள் உண்டாகின்றன. நாய் ஒன்று கங்கை நீரைக் குடித்தால் கங்கைக்கு குறைவு ஏதும் ஏற்படாது; மாறாக நாய்க்கு நன்மை ஏற்படுகிறது அல்லவா?

உயர்ந்தவர்களைத் தாழ்ந்தவர்கள் புகழ்ந்தால் உயர்ந்தவர்களுக்கு என்ன குறை உண்டாகப் போகிறது? ஆனால் இவ்விதம் தாழ்ந்தவர்கள் அவர்களைப் புகழும்போது, இந்த உலகமானது உயர்ந்தவர்களைக் கண்டு, “தாழ்ந்தவர்களுடன் இவன் தொடர்பு வைத்துள்ளானே? இவனும் அப்ப்டியெனில் அவர்கள் போன்றுதானோ?”, என்று எண்ண வாய்ப்புண்டு அல்லவோ? இதற்கு விடை அளிக்கிறார் - பாதுகை விஷயத்தில் இது பொருந்தாது, காரணம் பாதுகைகள் எந்தவிதமான தாழ்வும் அற்றவனும், ஆறு உயர்ந்த குணங்களின் இருப்பிடமாக உள்ளவனும் ஆகிய நம்பெருமாளின் திருவடித் தொடர்பு பெற்றவை என்பதால் ஆகும். ஆகவே, தாழ்வாக உள்ள, தான் புகழ்ந்ததால் இந்த உலகம் பாதுகையைப் பற்றித் தவறாகக் கூறாது என்கிறார். இங்கு கங்கையின் உதாரணம் பொருத்தமே - காரணம், த்ரிவிக்ரமனாக வாமனன் உயர்ந்தபோது, அவனது திருவடிகளின் தொடர்பு, பாதுகைகளைப் போன்று கங்கைக்கும் கிட்டியது அல்லவா?