Sri Paduka Sahasram - Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி (ச்லோகம் 9)

Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி

யதாதாரம் விச்வம் கதிரபி ச யஸ்தஸ்ய பரமா தமப்யேகா தத்ஸே திசஸி ச கதிம் தஸ்ய ருசிராம் கதம் ஸா கம்ஸாரேர் த்ருஹிணஹர துர்போத மஹிமா கவீநாம் க்ஷுத்ராணாம் த்வம் அஸி மணிபாது ஸ்துதிபதம்

கம்ஸனின் சத்ருவாகிய க்ருஷ்ணனின் அழகான திருவடிகளில் உயர்ந்த கற்களுடன் உள்ள பாதுகையே! இந்த உலகம் முழுவதையும் தாங்குபவனாக நம்பெருமாள் உள்ளான். அனைத்தும் வந்து சேரும் இடமாகவும் அவனே உள்ளான்.அப்படிப்பட்ட நம்பெருமாளையே நீ ஒருவளாகத் தாங்குகிறாயே! மேலும் அவனுக்கு ஏற்ற அழகான நடையையும் நீயே அளிக்கிறாய். உனது பெருமைகளை ப்ரம்மன்,சிவன் போன்றவர்களால் கூட அறிய இயலாது. அப்படி உள்ளபோது, அற்ப கவியான என் போன்றவர்கள் துதிக்கும் விஷயமாக நீ எப்படி உள்ளாய்?

இங்கு தாங்கி நிற்பது என்பதன் மூலம் உயர்த்தியைக் கூறுகிறார். தன்னை அண்டியவர்களை, நிலையாக அதே இடத்தில் உயர்த்தி நிறுத்தும் வல்லமை கொண்டது பாதுகையாகும் என்று கருத்து.