Sri Paduka Sahasram - Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி (ச்லோகம் 7)

Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி

விஜ்ஞாபயாமி கிம் அபி ப்ரதிபந்ந பீதி: ப்ராகேவ ரங்கபதி விப்ரமபாதுகே த்வாம் வ்யங்க்தும் க்ஷமா: ஸதஸதீ விகத அப்யஸூயா: ஸந்த: ஸ்ப்ருசந்து ஸதயை: ஹ்ருதயை: ஸ்துதிம் தே

ஸ்ரீரங்கநாதனின் பாதுகையே! உன்னைத் துதிக்க நான் இந்த ஸ்லோகங்களை எழுதத் தொடங்கும் முன்னர் (நான் இதனை எழுதத் தகுதி உள்ளவனா என்னும்) ஒரு விதமான பயம் ஏற்படுகிறது. இதனை நான் இங்கு ஒரு விண்ணப்பமாகச் செய்கிறேன் . அது என்னவெனில் - இந்த உலகில் உள்ள நல்லவை, தீயவை ஆகியவற்றை அறியும் திறன் உடைய பெரியோர்கள், மிகுந்த தயை செய்து, நான் இயற்றிய இந்த ஸ்லோகங்களை, பொறாமை நீங்கிய கருணை கொண்ட மனதுடன் கேட்க வேண்டும்.

இங்கு பொறாமை அற்ற பெரியவர்கள் என்றார். ஏன்? பொறாமை அற்றவர்கள், குறைகளை நம்மிடம் மட்டுமே கூறுவார்கள். ஆனால் பொறாமை உள்ளவர்கள் அந்தக் குறைகளை ஊர் முழுவதும் கூறி, நம்மை அவமானப்படுத்த எண்ணுவார்கள். எனவே தனது ஸ்லோகத்தில் குறை இருப்பின் தன் மீது பொறாமை அற்ற பெரியோர்கள் தன்னிடம் மட்டுமே தெரிவித்தல் நலம் என்பதால் இவ்விதம் கூறினார். மேலும், இந்தச் ச்லோகத்தில் குறை உள்ளது என்று பொறாமை காரணமாகக் கூறிவிட்டால், பாதுகையைப் பற்றிய ச்லோகத்தை அபசாரம் செய்தது போன்றதாகிவிடும். அதனால் அவர்களுக்கு ஏற்படும் அபசாரத்திற்குத் தான் காரணமாகி விடக்கூடாது என்று அஞ்சுகிறார்.