Sri Paduka Sahasram - Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி (ச்லோகம் 4)

Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி

திவ்ய ஸ்தாநாத் த்வம் இவ ஜகதீம் பாதுகே காஹமாநா பாத ந்யாஸம் ப்ரதமம் மநகா பாரதீ யத்ர சக்ரே யோக க்ஷேமம் ஸகல ஜகதாம் த்வயி அதீநம் ஸ ஜாநந் வாசம் திவ்யாம் திசது வஸுதாச்ரோத்ர ஜன்மா முநிர் மே

பாதுகையே! ஸத்ய லோகத்தில் இருந்து ஸ்ரீரங்கநாதனை நீயே அயோத்திக்கு எழுந்தருளச் செய்தாய். உன்னைத் தொடர்ந்து வந்த சரஸ்வதி, அயோத்தி இராமனின் காவியமான இராமாயணத்தின் வாக்குகளை வால்மீகிக்கு அளிக்கும் விதமாக பூமிக்கு வந்தாள். இத்தகைய வால்மீகி முனிவர் எனக்கு சிறந்த சொற்களை அளிக்கவேண்டும்

இராமாயணத்திற்கு முன்பு வேதங்கள், புராணங்கள் என்று பல இருந்தபோதிலும், ஸம்ஸார விஷயங்கள் அடக்கிய உயர்ந்த நூல்கள் ஏதும் இருந்தது கிடையாது. ஆக முதலில் தோன்றிய இனிமையான காவியம் இராமாயணமே ஆகும். இதே போன்று முதல் அர்ச்சாவதாரமாக இந்த மண்ணில் இறங்கியவன் பெரியபெருமாள் என்றும், நம்பெருமாள் என்றும், அழகிய மணவாளன் என்றும் போற்றப்படும் ஸ்ரீரங்கநாதன் என ஒப்பு நோக்குகிறார். சரஸ்வதிக்கும் பாதுகைக்கும் உள்ள ஒற்றுமை என்ன? சரஸ்வதி முதன் முதலாக பாரத கண்டத்தில் தோன்றியதால் பாரதி எனப்பட்டாள்; பாதுகை முதலில் பரதனால் ஆராதிக்கப்பட்டதால் பாரதி எனப்படுகிறது. முதலில் பாதுகை இங்கு வந்திருக்கவேண்டும் . அதனை ஒரு கணமும் பிரியாதவனான நம்பெருமாள், பாதுகைகளைத் தொடர்ந்தபடி இங்கு வந்தான் என்று கருத்து.