Sri Paduka Sahasram - Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி (ச்லோகம் 1)

Paththati 1 - ப்ரஸ்தாவ பத்ததி

ஸந்த: ஸ்ரீரங்க ப்ருத்வீச சரணத்ராண சேகரா: ஜயந்தி புவநத்ராண பதபங்கஜ ரேணவ:

ஸ்ரீரங்கநாச்சியாரின் நாயகனான ஸ்ரீரங்கநாதனின் மென்மையான திருவடிகளை எப்போதும் பாதுகாக்கும் அவனுடைய பாதுகைகளைச் சிலர் தங்கள் தலையின் மீது ஆபரணம் போன்று, அலங்காரமாக ஏற்கின்றனர். அப்போது, அனைத்து உலகங்களையும் காத்து நிற்கும், மென்மையான தாமரை போன்று சிவந்த திருவடிகளின் தூசிகள், அவர்களது தலையின் மீது படிகின்றன. இதன் காரணமாக அவர்கள் அனைத்திலும் வெற்றியுடன் உள்ளனர். குறிப்பு - இதற்கு சிலர் வேறுவிதமாகவும் பொருள் கூறுவர். பாதுகைகளைத் தங்கள் தலையில் ஏற்பவர்களுடைய பாததூசிகள் இந்த உலகம் முழுவதும் படிகின்றன. இதன் மூலம் அவர்கள் அனைத்து இடங்களிலும் வெற்றியை ஏற்படுத்துகின்றனர்.

இந்தச் ச்லோகத்தின் மூலம், நம்மாழ்வாரின் புகழை வெளிப்படுத்துகிறார். ஸ்ரீரங்கநாதனின் பாதுகை என்பது நம்மாழ்வாரையே குறிக்கும். ஆக, நம்மாழ்வாரைத் தங்கள் தலைக்கு மேல் வைத்துக் கொண்டாடுபவர்களுக்கு அனைத்திலும் வெற்றியே என்று கூறுகிறார்.