Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம் (பத்தி 20)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம்
எட்டும் இரண்டும் அறியாத எம்மை இவை அறிவித்து எட்டவொண்ணாத இடந்தரும் எங்கள் அம்மாதவனார் முட்ட வினைத்திரள் மாள முயன்றிடும் அஞ்சல் என்றார் கட்டெழில் வாசகத்தால் கலங்கா நிலை பெற்றனமே
– எட்டு எழுத்துக்கள் கொண்ட திருமந்த்ரம் மற்றும் இரண்டு அடிகள் கொண்ட த்வயம், சரமச்லோகம் ஆகியவற்றை அறியாத எங்களுக்கு இவற்றை உபதேசம் செய்து, இதன் மூலம் எளிதில் எட்டுவதற்கு இயலாத பரமபதத்தை அளிப்பவனாகிய ஸ்ரீமந்நாராயணன், “உங்களுடைய கர்ம கூட்டங்கள் அனைத்தும் அழியும்படியாக ப்ரபத்தியைக் கைக்கொள்வீராக” என்று அருளிச்செய்தான். அப்படிப்பட்ட கட்டு குலையாத அழகுடன் கூடியதான அவனுடைய சரமச்லோகத்தின் மூலம் நாங்கள் கலக்கம் அடையாத நிலையைப் பெற்றோம்.