Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம் (பத்தி 18)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம்

மறை உரைக்கும் பொருள் எல்லாம் மெய் என்று ஓர்வார் மன்னிய கூர் மதி உடையார் வண்குணத்தில் குறை உரைக்க நினைவில்லார் குருக்கள் தம்பால் கோதற்ற மனம் பெற்றார் கொள்வார் நன்மை சிறை வளர்க்கும் சில மாந்தர் சங்கேதத்தால் சிதையாத திண் மதியோர் தெரிந்தது ஓரார் பொறை நிலத்தின் மிகும் புனிதர் காட்டும் எங்கள் பொன்றாத நன்னெறியில் புகுதுவாரே

– வேதங்களில் கூறப்படுகின்ற ஆழ்பொருள்கள் அனைத்தும் உண்மையே என்று உறுதியாக எண்ணுபவர்களாகவும், திடமானதும் கூர்மையானதும் ஆகிய புத்தியைக் கொண்டவர்களாகவும், மற்றவர்களுடைய குணங்களில் குற்றம் காண எண்ணம் இல்லாதவர்களாகவும், ஆசார்யர்களிடம் சிறந்த விஷயங்களைப் பெறுபவர்களாகவும், சிறையாக உள்ள ஸம்ஸாரத்தை மேன்மேலும் வளர்க்கின்றவர்களுடைய கட்டுப்பாட்டால் கெடாத உறுதியானவர்களாகவும், அற்பமானவற்றில் ஈடுபாடு கொள்ளாதவர்களாகவும் உள்ளவர்கள், பூமியைக் காட்டிலும் பொறுமையான ஆசார்யர்களால் காண்பிக்கப்பட்ட எங்களுடைய அழியாத மார்க்கத்தில் சேர்வர்.