Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம் (பத்தி 14)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம்
முன்பெற்ற ஞானமும் மோகம் துறக்கலும் மூன்று உரையில் தன்பற்ற தன்மையும் தாழ்ந்தவர்க்கு ஈயும் தனித்தகவும் மன்பற்றி நின்ற வகை உரைக்கின்ற மறையவர்பால் சின்பற்றி என் பயன் சீர் அறிவோர்க்கு இவை செப்பினமே
– மன்னனாக உள்ள ஸர்வேச்வரனைச் சரணம் என்று அடைந்து, அதன் விளைவாக உயர்ந்த நிலையை அடைந்த விதத்தை உபதேசிப்பவர்களும், வேதங்களை நன்றாக அறிந்தவர்களும் ஆகிய சான்றோர்களிடம் உன்னதமான ஞானத்தைப் பெறுவதற்கு சிலர் விழையக்கூடும். இவர்கள் பொருட்டு, “நம்முடைய ஆசார்யர்களிடமிருந்து நாம் பெற்ற ஞானமும், மயக்கத்தை நீக்குதலும், மூன்று ரஹஸ்யங்களில் நமக்கு நம்மைக் குறித்த சுதத்திரம் இல்லாமையும், தன்னை வந்து பணிந்தவர்கள் விஷயத்தில் ஏற்படும் க்ருபையும்” என்பதான பல விஷயங்களை இந்த நூலில் நாம் உரைத்தோம். இதனைக் கருத்தில் கொள்ளாமல் அற்ப விஷயங்களில் ஈடுபடுதலால் என்ன பயன் உள்ளது?