Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம் (பத்தி 11)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம்

பெரியபெருமாளின் திருவடிகளை வர்ணித்தல்

உறுசகடம் உடைய ஒரு காலுற்று உணர்ந்தன உடன் மருதம் ஒடிய ஒரு போதில் தவழ்ந்தன உறி தடவும் அளவில் உரலோடு உற்று நின்றன உறு நெறி ஓர் தருமன் விடு தூதுக்கு உகந்தன மறநெறியர் முறிய பிருதானத்து வந்தன மலர்மகள் கை வருட மலர் போதிற் சிவந்தன மறு பிறவி அறு முனிவர் மாலுக்கு இசைந்தன மனுமுறையில் வருவது ஓர் விமானத்து உறைந்தன அறமுடைய விசயன் அமர் தேரில் திகழ்ந்தன அடல் உரக படம் மடிய ஆடிக் கடிந்தன அறு சமயம் அறிவு அரிய தானத்து அமர்ந்தன அணிகுருகை நகர் முனிவர் நாவுக்கு அமைந்தன வெறியுடைய துவளமலர் வீறுக்கு அணிந்தன விழுகரி ஓர் குமரன் என மேவிச் சிறந்தன விறல் அசுரர் படை அடைய வீயத் துரந்தன விடல் அரிய பெரியபெருமாள் மென் பதங்களே

– யாராலும் விட இயலாதபடி உள்ள பெரியபெருமாளுடைய மென்மையான திருவடிகள் எப்படி உள்ளன என்றால்: சகடாசுரன் உடையும்படியாக முன்பு கூர்மையாக நோக்கியபடி இருந்தன; ஒன்றாகச் சேர்ந்திருந்த மருதமரங்கள் ஒடிந்து விழும்படியாக ஒரு காலத்தில் தவந்தன; வெண்ணெய் முதலானவற்றை வைத்திருந்த உறியைத் தொட்ட நேரத்தில், உரலோடு ஒன்றாகக் கட்டப்பட்டன; சிறந்த நெறியுடன் நிற்கும் ஒரே தர்மபுத்ரன் அனுப்பிய தூதிற்காக மகிழ்ந்தபடி சென்றன; கம்சன் அனுப்பிய கொடியவர்கள் அழியும்படியாக பிருந்தாவனத்திற்கு வந்தன; தாமரையில் வீற்றுள்ள பெரியபிராட்டியாரின் மென்மையான வருடலைக் கூடப் பொறுக்க இயலாமல் மலரைக் காட்டிலும் சிவந்தன; அடுத்த பிறவியை நீக்கவல்ல முனிவர்களுடைய பக்தியை ஏற்றன; மனுவம்சத்தில் இந்த உலகிற்கு வந்த ஸ்ரீரங்க விமானத்தில் எப்போதும் உள்ளன; தர்மம் பொருந்திய அர்ஜுனன் அமர்ந்த திருத்தேரில் காணப்பட்டன; வலிமையான காளியனுடைய படங்கள் அனைத்தும் நலியும்படியாக ஆடின; ஆறு மதங்களால் அறிய இயலாத பரமபதத்தில் அமர்ந்தன; ஆபரணமாகத் திகழும் ஆழ்வார் திருநகரியின் எஜமானராகிய நம்மாழ்வாருடைய திருவாய்மொழிக்கு ஏற்றபடி விளங்கின; பரிமளம் கொண்ட துளசியின் அழகுக்கு ஏற்றபடியான அழகுடன் விளங்கின; உத்தரையின் கர்ப்பத்திலிருந்து விழுந்த கரிக்கட்டையை, பரீக்ஷித் என்னும் ஒப்பற்ற குமரனாகச் செய்தன; வலிமையுள்ள அசுரர் படைகளை விரட்டின.