Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம் (பத்தி 9)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம்

பூர்வாசார்யர்களைப் பின்பற்றினால் கிட்டும் நன்மைகள்

மூலம் – “தத் ப்ரகாசிதத்வார:” என்கிறபடியே ஹார்தனான ஈச்வரனுடைய ஸௌஹார்தத்தாலே காட்டப்படுகிற அர்ச்சிராதி மார்க்கத்தாலே அவ்வோ தேவதைகள் தத்தம் எல்லைகள்தோறும் மங்கல ப்ரதீப பூர்ணகும்பாதிகளை முன்னிட்டு ஸபரிகரராய் எதிர்கொண்டு ஸார்வபௌம உபசாரங்களைப் பண்ணி வழி நடத்த, கர்மலோகத்தில் இருந்த நாள் இறைகொண்ட தேவதைகளெல்லாம் காணிக்கையிட்டுக் கண்டு அநுவர்த்திக்க, அவர்களுக்கும் எட்டவொண்ணாத எல்லைகளெல்லாம் கடந்து நித்யஸூரிகள் திரளிற் புக்கால் வாசி தெரியாதபடியான நிரதிசய பூர்த்தியைப் பெற்று,

– ப்ர. ஸூ. (4-2-16 ததோக: அக்ரஜ்வலநம் தத் ப்ரகாசி தத்வாரோ வித்யா ஸாமர்த்யாத் தச்சேஷ கத்யநுஸ்ம்ருதியோகாச்ச ஹார்த்தாநுக்ருஹீத: சதாதிகயா - ப்ரஹ்மவித்யையின் திறன் காரணமாகவும், அந்த வித்யைக்கு அங்கமாக உள்ள அர்ச்சிராதி மார்க்கத்தையே சிந்தனை செய்தபடி இருத்தல் என்ற யோகத்தாலும், தனது இதயம் என்ற தாமரையில் அமர்ந்துள்ள எம்பெருமானால் அருளப்படுகிறான். இதனால் பகவான் வசிக்கின்ற அந்த இதயம் ஒளி வீசுகிறது. அந்த ஒளியின் மூலம் காண்பித்துக் கொடுக்கப்பட்ட நூற்று ஒன்றாவது நாடியான ஸுஷும்நை நாடி மூலம் கிளம்புகிறான் – என்று கூறுவதற்கு ஏற்ப, இதயத்தில் எப்போதும் வீற்றுள்ள ஈச்வரனுடைய நல்லெண்ணம் காரணமாக வழி காண்பிக்கப்படுவதான அர்ச்சிராதி மார்க்கத்தில் செல்லும்போது, அந்தந்த தேவதைகள் தங்கள் எல்லைகள் முடிய மங்களதீபம் மற்றும் பூர்ணகும்பம் ஆகியவற்றை அளித்து, தங்களுடைய பரிவாரங்களுடன் எதிர்கொண்டு அழைத்து, ஓர் அரசனுக்குச் செய்யவேண்டிய மரியாதைகளைச் செய்து வழி நடத்தியபடி இருப்பர். இவர்கள் இந்தக் கர்மபூமியில் இருந்த காலம் முடிய யாகங்களில் அவிர்பாகம் அளித்தபோது அவற்றை ஏற்றுக்கொண்ட தேவதைகள் அனைவரும் இவர்களுக்கு வழி முழுவதும் உபசாரங்கள் செய்தபடி இருப்பர். அவர்களால் பின்தொடர இயலாத எல்லையைக் கடந்து செல்லும் இவர்கள், நித்யஸூரிகள் உள்ள இடத்தை அடைந்து, அந்தக் கூட்டத்தில் கலந்த பின்னர், இவர்களுக்கும் அவர்களுக்கும் இடையே வேறுபாடு இல்லாதபடியாக அனைத்திலும் எல்லையற்ற முழுமை அடைவார்கள்.