Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம் (பத்தி 7)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம்

பூர்வாசார்யர்களைப் பின்பற்றினால் கிட்டும் நன்மைகள்

மூலம் – “த்வம் ந்யஞ்சித்பிருதஞ்சித்பி: கர்மஸூத்ரோபபாதிதை: | ஹரே விஹரஸி க்ரீடா கந்துகைரிவ ஜந்துபி:” என்கிற பகவத் லீலோபகரணமான தசை கழிந்து மற்றுமுள்ள அதிசயித பலங்கள் பெறப்போம் அதிகாரிகளுடைய வழிகளிற்காட்டில் புருஷார்த்த பூயஸ்தையாலும், புநராவ்ருத்தியில்லாமையாலும் “தேப்யோ விசிஷ்டாம் ஜாநாமி கதிமேகாந்திநாம் ந்ருணாம்”, “உத்க்ராமதி ச மார்கஸ்த: ... சீதிபூதோ நிராமய:”, “தேவயாந: பர: பந்தா யோகிநாம் க்லேச ஸம்க்ஷயே” இத்யாதிகளிற்படியே அத்யந்த விசிஷ்டமாய்,

– ஸ்ரீவிஷ்ணுதர்மம் - த்வம் ந்யஞ்சித்பிருதஞ்சித்பி: கர்மஸூத்ரோபபாதிதை: | ஹரே விஹரஸி க்ரீடா கந்துகைரிவ ஜந்துபி: - ஸர்வேச்வரனே! கர்மங்கள் என்னும் கயிற்றால் கட்டப்பட்ட பந்துகள் போன்று கீழும் மேலுமாக எழும்பியபடி உள்ள ஜந்துக்களைக் கொண்டு நீ விளையாடுகிறாய் – என்று கூறுவதற்கு ஏற்ப, பகவானின் லீலையில் விளைவாக ஸம்ஸார நிலையில் உள்ளவர்கள், அந்த நிலை நீங்கிய பின்னர், ஸ்வர்கம் முதலான பலன்களைப் பெறுகின்ற அதிகாரிகள் செல்லும் பாதையைக் காட்டிலும் வேறான (அர்ச்சிராதி) பாதையில் செல்கிறார்கள். இத்தகைய மார்க்கமானது புருஷார்த்தத்தின் மேன்மை மற்றும் மீண்டும் ஸம்ஸாரத்திற்குத் திரும்புதல் இல்லாமை ஆகிய காரணங்களால், மஹாபாரதம் சாந்திபர்வம் (358-6) - தேப்யோ விசிஷ்டாம் ஜாநாமி கதிம் ஏகாந்திநாம் ந்ருணாம் – அவனைச் சரணம் புகுந்தவர்கள் செல்லும் வழியானது மிகவும் மேலானது – என்றும், மஹாபாரதம் சாந்திபர்வம் (194-27) - உத்க்ராமதி ச மார்கஸ்த: ... சீதிபூதோ நிராமய: - மேலே எழும்பும் ஜீவாத்மா அந்த மார்க்கத்தில் சென்று ... ஸம்ஸார துன்பம் நீங்கப்பெற்று – என்றும், தேவயாந: பர: பந்தா யோகிநாம் க்லேச ஸம்க்ஷயே – யோகிகளுக்கு கர்மங்கள் நீங்கிய பின்னர் தேவயானம் என்னும் உயர்ந்த மார்க்கம் கிட்டுகிறது – என்றும் கூறுவதற்கு ஏற்ப மிகவும் உயர்ந்ததாக உள்ளது.