Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம் (பத்தி 6)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம்
பூர்வாசார்யர்களைப் பின்பற்றினால் கிட்டும் நன்மைகள்
மூலம் – இவ்வழி நடந்தவர்களுக்கு, “அவிச்ராந்தமநாலம்பம் அபாதேயமதேசிகம் | தம: காந்தாரமத்வாநம் கதமேகோ கமிஷ்யஸி” என்றும், “நிஷ்பாநீயே நிராலம்பே நிச்சாயே நிரபாச்ரயே | த்ராகீயஸ்யசுபே மார்கே யமஸ்ய ஸதநம் ப்ரதி” என்றும் மஹர்ஷிகள் நெஞ்சாறல்படும் வழிகள் காணவேண்டா. பஞ்சாக்நி வித்யையிற் சொன்னபடியே “பருத்திபட்ட பன்னிரண்டும் பட்டுப் பூட்டைக் குண்டிகை போலே” ஏறுவது இழிவதாக தூமாதி மார்கத்திலே பரிப்ரமிக்கவும் வேண்டா.
– இத்தகைய நல்வழியில் செல்பவர்களுக்கு, மஹாபாரதம் சாந்திபர்வம் (337-34) - அவிச்ராந்தமநாலம்பம் அபாதேயமதேசிகம் | தம: காந்தாரமத்வாநம் கதமேகோ கமிஷ்யஸி - இளைப்பாறுவதற்கு ஏற்ற இடம் இல்லாமல், பற்றிக் கொள்ள கைப்பிடி இல்லாமல், பசியைத் தீர்ப்பதற்கான உணவும் இல்லாமல், வழி காட்டுபவர்கள் இல்லாமல், இருளில் செல்லவேண்டியதாக உள்ள நரக மார்க்கம் என்பதில் நீ தனித்து எவ்விதம் செல்வாய் – என்றும், வங்கீபுரத்து நம்பி காரிகை (24) - நிஷ்பாநீயே நிராலம்பே நிச்சாயே நிரபாச்ரயே | த்ராகீயஸ்யசுபே மார்கே யமஸ்ய ஸதநம் ப்ரதி – பருகுவதற்கு நீரும், தாங்குவதற்குக் கைப்பிடியும், ஒதுங்குவதற்கு நிழலும், தங்குவதற்கு இடமும் இல்லாமல், மிகவும் நீண்டதாக, துக்கத்தை மட்டுமே அளிப்பதாக உள்ள யமனின் இடத்திற்குச் செல்லும் பாதையே எனக்கு அச்சத்தை உண்டாக்கும் பிறவிகளுடைய வரிசையாக உள்ளன – என்றும், மஹரிஷிகள் வேதனை அடைகின்ற வழிகளில் செல்லவேண்டிய அவசியல் இல்லை. பஞ்சாக்நி வித்யையில் கூறுவது போன்று, பருத்தியானது பல நிலைகளைக் கடந்த பின்னர் ஆடையாவது போன்றும், ஏற்றம் நீர் இறைக்கும்போது மேலும் கீழுமாகச் செல்வது போன்றும், தூமாதி மார்க்கமாக வருவதும் போவதுமாக உள்ள நிலை உண்டாகாது.