Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம் (பத்தி 5)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம்

இந்த நூலில் கூறியவற்றுக்குத் தோஷம் இல்லாமை

மூலம் – “ஸூக்ஷ்ம: பரமதுர்ஜ்ஞேய: ஸதாம் தர்ம: ப்லவங்கம” என்றும், “தர்மஸ்ய தத்த்வம் நிஹிதம் குஹாயாம்” என்றும், “அணீயாந் க்ஷுரதாராயா: கோ தர்மம் வக்துமர்ஹதி” என்றும் ரிஷிகளுக்கும்கூட வருந்திப் பத விந்யாஸம் பண்ண வேண்டி இருக்கிற நிலங்களில், “மஹாஜநோ யேந கத: ஸ பந்தா:” என்றும், “தர்மசாஸ்த்ர ரதாரூடா வேத கட்க தரா த்விஜா: | க்ரீடார்த்தமபி யத் வ்ரூயு: ஸ தர்ம: பரமோ மத:” என்றும் சொல்லுகிறபடியே ச்ருதி ஸ்ம்ருதி சரணரான பூர்வாசார்யர்கள், கண்டக சோதநம் பண்ணி நடந்த வழியிலே நடக்கையாலே நமக்கு வருவதொரு தப்பில்லை.

– இராமாயணம் கிஷ்கிந்தாகாண்டம் (18-15) - ஸூக்ஷ்ம: பரமதுர்ஜ்ஞேய: ஸதாம் தர்ம: ப்லவங்கம –உயர்ந்தவர்கள், தங்களை அண்டியவர்களைக் காக்கும் தர்மம் மிகவும் ஸூக்ஷ்மமானது – என்றும், மஹாபாரதம் வனபர்வம் (268-121) - தர்மஸ்ய தத்த்வம் நிஹிதம் குஹாயாம் – தர்மத்தின் தத்வம் இரகசியமானது – என்றும், மஹாபாரதம் உத்யோகபர்வம் (35-29) - அணீயாந் க்ஷுரதாராயா: கோ தர்மம் வக்துமர்ஹதி – கத்தி நுனியைக் காட்டிலும் ஸூக்ஷ்மமான தர்மத்தை யாரால் விளக்கும் தகுதி யாருக்கு உள்ளது – என்றும் கூறுவதற்கு ஏற்ப, மிகவும் உயர்ந்த மஹரிஷகளும் கூட மிகவும் சிரமத்துடன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் உள்ளன. ஆனால், மஹாபாரதம் வனபர்வம் (268-121) - மஹாஜநோ யேந கத: ஸ பந்தா: - சான்றோர்கள் எந்த வழியில் நடந்தார்களோ அதுவே நமக்கும் சிறந்த வழியாகும் – என்றும், தர்மசாஸ்த்ர ரதாரூடா வேத கட்க தரா த்விஜா: | க்ரீடார்த்தமபி யத் வ்ரூயு: ஸ தர்ம: பரமோ மத: - தர்மசாஸ்த்ரம் என்னும் தேரில் அமர்ந்து, வேதங்கள் என்னும் வாளைக் கையில் பிடித்து நிற்கும் அந்தணர்கள் விளையாட்டாகவே உரைப்பதும் கூட தர்மம் என்றே கொள்ளப்படும் – என்றும் கூறுவதற்கு ஏற்ப ச்ருதி மற்றும் ஸ்ம்ருதி ஆகியவற்றையே அண்டி நிற்கும் நம்முடைய பூர்வாசார்யர்கள், வழியில் உள்ள முட்களை எடுத்து பாதையைத் தூய்மையாக்குவது போன்று உண்டாக்கிய பாதையில் நாம் செல்வதால், நமக்கு வழி தவறிப் போகும் பாதிப்பும் தவறும் ஏற்படுவதில்லை.