Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம் (பத்தி 3)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம்
கடந்த அதிகாரங்களுடைய திரண்ட பொருள்
மூலம் – (16) பகவத் கைங்கர்யத்துக்கு எல்லை நிலம் பாகவத கைங்கர்யமானபடியும்; (17) சாஸிதாவான ஸ்வாமிக்கு அபிமதமல்லாதது கைங்கர்யமல்லாமையாலே, யதா சாஸ்த்ரம் கைங்கர்யம் அநுஷ்டிக்க வேண்டினபடியும்; (18) இச் சாஸ்த்ரீய கைங்கர்ய ப்ரவ்ருத்தனுக்கு அபராதங்கள் புகாமைக்கும் புகுந்தவை கழிகைக்கும் விரகுகளும்; (19) இந் நிரபராத கைங்கர்யத்துக்கு ஸ்தாநமாக அநாபத்தில் உசிதமாவது பாகவத ஆச்ரிதமான பகவத் க்ஷேத்ரமென்னுமிடமும்; (20) இப்படி இருந்த இவ் அதிகாரிக்கு சரண்ய ஸங்கல்ப விசேஷத்தாலே ப்ரசஸ்த தேச காலாதி நியதி நிரபேக்ஷமாக, ஸ்தூல சரீரத்தினின்றும் நிர்யாணமிருக்கும்படியும்; (21) இப்படிப் புறப்பட்டால் பிதா யௌவராஜ்யத்துக்கு முடிசூட்ட அழைத்து வரவிட்ட ராஜகுமாரன் போமாப் போலே பெரிய மேன்மையோடே பரமபத பர்யந்தமாக அர்ச்சிராதி மார்க்கத்தாலே போம்படியும்; (22) இப்படிப் போனால் அங்கு பிறக்கும் ஸ்வச்சந்த கைங்கர்ய பர்யந்தமாக பரிபூர்ண அநுபவ ரூபமான முக்தைச்வர்யமிருக்கும்படியும்; (23) இப்படி உக்தமான ஜ்ஞாதவ்யங்களில் ப்ரதானமான ஸித்தோபாயத்தையும்; (24) கர்த்தவ்யங்களில் ப்ரதானமான ஸாத்யோபாயத்தையும்; (25, 26) இவ் உபாய நிஷ்டனுடைய ப்ரபாவத்தில் சாஸ்த்ரங்களிசையாத ஏற்றச் சுருக்கங்களையும் பற்றி ஆஹார தோஷ ஹேதுக ஸம்ஸர்க்க யுகஸ்வபாவாதிகளாலே வரும் கலக்கங்களுக்குப் பண்ணும் பரிஹார ப்ரகாரங்களும்; (27, 28, 29) இவையெல்லாம் அநுஸந்திக்கைக்கு முகமான ரஹஸ்ய த்ரயத்தில், பத வாக்ய யோஜநைகளும்; (30) இவ்வர்த்தங்களுக்கெல்லாம் யதா சாஸ்த்ரம் ஸம்ப்ரதாய ப்ரவர்த்தநம் பண்ணும் ஆசார்யனுக்கு உபதேசாதி ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி விஷயங்களிருக்கும்படியும்; (31) இப்படிப் பரமோபகாரகனான ஆசார்யன் திறத்தில் தகுதியான ப்ரத்யுபகாரமில்லாமையாலே நித்ய ருணியான சிஷ்யனுக்குச் செய்ய அடுக்குமைவையெல்லாம்; (32) ச்ருதி ஸ்ம்ருதி ஸூத்ர ஸம்ப்ரதாயங்களாலும், இவற்றுக்கு அநுகூலங்களான ஸமீசீந ந்யாயங்களாலும், அஜ்ஞாந ஸம்சய விபர்யயங்களற யதா ச்ருதம் யதா ஹ்ருதயம் உபபாதித்தோம்.
– (16) பகவத் கைங்கர்யத்தின் எல்லையாக பாகவத கைங்கர்யம் உள்ளது. (17) தன்னுடைய எஜமானனாகிய பகவானுக்கு விருப்பம் அற்றவை கைங்கர்யமாக இருக்காது என்பதால், சாஸ்த்ரங்கள் எவ்விதம் கூறுகின்றனவோ அதன்படியே கைங்கர்யம் செய்யவேண்டும். (18) சாஸ்த்ர முறைப்படி கைங்கர்யங்களைச் செய்யும் ஒருவனுக்குத் தோஷங்கள் உண்டாகாது; அதனையும் மீறி உண்டானாலும் கூட, அவை நீங்கக்கூடிய வழிகள். (19) எந்தவிதமான தோஷங்களும் இல்லாத கைங்கர்யத்திற்கு இடமாகவும், ஆபத்து இல்லாதபோது ஏற்றதும், பாகவதர்கள் வசிக்கின்ற பகவத் க்ஷேத்ரமே ஆகும். (20) இவ்விதம் உள்ள இந்த அதிகாரிக்கு பகவானுடைய ஸங்கல்பத்தின் சிறப்பு காரணமாக இடம் மற்றும் காலம் ஆகிய கட்டுப்பாடுகள் இன்றி, சரீரத்திலிருந்து உயிர் பிரிதல். (21) இவ்விதம் புறப்பட்ட பின்னர், அரசன் ஒருவனால் முடிசூட்டிக் கொள்ள அழைப்பு விடுக்கப்பட்ட அரசகுமாரன் போன்று, மிகுந்த மேன்மையுண்ட அர்ச்சிராதி மார்க்கமாகப் பரமபதம் செல்லும் விதம். (22) இவ்விதம் பரமபதம் சென்ற பின்னர், பரிபூர்ணமான பகவத் அனுபவத்துடன் கூடிய கைங்கர்யம் என்பதான முக்தி ஐச்வர்யம் உள்ள நிலை. (23) இப்படியாக அறியவேண்டிய விஷயங்களில் முதன்மையாக உள்ள ஸித்தோபாயமான பகவானைக் குறித்த கலக்கங்களும் அவற்றின் நீக்கமும். (24) செய்யவேண்டியவற்றில் முதன்மையாக உள்ள ஸாத்யோபாயமான ப்ரபத்தியைக் குறித்த கலக்கங்களும் அவற்றின் நீக்கமும். (25, 26) ப்ரபந்நனுடைய மேன்மையில் சாஸ்த்ரங்கள் ஒப்புக்கொள்ளாத ஏற்றம் குறித்த சந்தேகங்களும் விளக்கங்களும்; மேலே கூறப்பட்ட ஸித்தோபாயம், ஸாத்யோபாயம், ப்ரபந்நனுடைய ப்ரபாவம் ஆகியவை குறித்து தூய்மையற்ற உணவு, தகாதவர்களுடைய உறவு, வசிக்கும் யுகத்தின் இயல்பு முதலானவை காரணமாக ஏற்படக்கூடிய சந்தேகங்கள் மற்றும் விளக்கங்கள். (27, 28, 29) இவை அனைத்தையும் எப்போதும் எண்ணியபடி இருப்பதற்கு ஏற்ற வழியாக, மூன்று ரஹஸ்யங்களின் பதங்களும் அவற்றின் பொருள்களும் இருத்தல். (30) இவை அனைத்தையும் குறித்து தகுந்த சாஸ்த்ரங்களின் அடிப்படையில் உபதேசம் செய்யும் ஆசார்யன், அத்தகைய உபதேசங்களைச் செய்யும்போது செய்யவேண்டியவை மற்றும் தவிர்க்கவேண்டியவை எவை. (31) இவ்விதம் மிகப் பெரிய உபகாரம் செய்த ஆசார்யனுக்கு ஏற்ற கைம்மாறு எதுவும் சிஷ்யனிடம் இருக்காது என்பதால், எப்போதுமே அவருக்குக் கடனாளியாகவே உள்ள சிஷ்யன் செய்யத் தகுந்தவை. (32) இது போன்ற அனைத்தைக் குறித்து ச்ருதி, ஸ்ம்ருதி, ப்ரஹ்மஸூத்ரம், ஸம்ப்ரதாயம் ஆகியவற்றைக் கொண்டும், இவைகளுக்கு ஏற்றபடியாக உள்ள யுக்தி ந்யாயங்களைக் கொண்டும், “அறியாமை, சந்தேகம், தவறாக அறிதல்” ஆகிய தோஷங்கள் விலகும்படியாக, முன்னோர்களிடமிருந்து கேட்டதன் மூலமும், நமக்குத் தென்பட்ட ப்ரமாணங்கள் மூலமும் நாம் விரிவாக உரைத்தோம்.