Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம் (பத்தி 2)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 32.நிகமந அதிகாரம்
கடந்த அதிகாரங்களுடைய திரண்ட பொருள்
மூலம் – (1) இப்படி இஜ்ஜீவாத்மா ஸூரிகளோடு ஒக்க பகவதநுபவ ரஸத்துக்கு ஸ்வரூப யோக்யனாய் வைத்து அநாதிகாலம் இழந்து ஓரளவிலே புரிந்து ஸதாசார்ய ஸம்பந்தமுண்டாய்த் தத்வ ஹிதங்களை அறியத் தொடங்கினபடியும்; (2) இவற்றை அறிவிக்கும் ப்ரமாணங்களில் ரஹஸ்யத்ரயம் ஸாரதமமானபடியும்; (3) இவற்றைக் கொண்டு அறியும் அர்த்தங்களில் ஈச ஈசிதவ்யங்களினுடைய சரீர ஆத்மபாவ ஸம்பந்தாதிகள் ப்ரதாந ப்ரதிதந்த்ரமாய் ஜ்ஞாதவ்யங்களானபடியும்; (4) இஸ் ஸம்பந்தத்தோடே கூட ஜ்ஞாதவ்யமாக பூர்வாசார்ய ஸங்க்ருஹீதமான அர்த்தபஞ்சகம் ரஹஸ்யத்ரயத்தில் கிடக்கும்படியும்; (5) இவ் அர்த்தபஞ்சகத்துக்குள்ளே தத்வத்ரயாதி விபாக சிந்தை பண்ணுவார்க்குத் தாத்பர்யமும்; (6) இவ் அர்த்தபஞ்சகத்தில் ஈச்வரனாக ஸாத்விக சாஸ்த்ரங்களிற் சொல்லப்பட்டவன் ஸ்ரீய:பதியென்னுமிடமும்; (7) இத் தத்வ த்ரயங்களெல்லாம் தெளிந்தவன் முமுக்ஷுவாய் மோக்ஷ உபாய உந்முகனாம்படியும்; (8) அதிகாரி விபாகமும்; (9) இவ் அதிகாரிகளுக்கு அநுரூபமான உபாய விபாகமும்; (10) இவ்வுபாயங்களில் ஸ்வதந்த்ர ப்ரபத்தி நிஷ்டனுக்கு அதிகார விசேஷம் இருக்கும் கட்டளையும்; (11) ஸக்ருத் கர்த்தவ்யமான இவ்வுபாயத்துக்கு அநுரூபமாக விஹிதமான பரிகர விபாகமும்; (12) முமுக்ஷுவுக்கு பரிகரமான பரந்யாஸ ரூப ப்ரதாந கர்த்தவ்யத்தினுடைய ஸந்நிவேசம் இருக்கும்படியும்; (13) இப்படி ஸாங்க ப்ரபதந அநுஷ்டானம் பண்ணினவன் ஸர்வரக்ஷண அதிக்ருதன் பக்கலிலே ந்யஸ்த பரனாகையாலே க்ருதக்ருத்யனாம்படியும்; (14) இந் நிஷ்டை தனக்குப் பிறந்தமை கண்டு தான் தேறியிருக்கைக்கு அடையாளங்களும்; (15) இவனுக்கு ஆர்த்தியில் மாந்த்யத்தாலே சரீரம் அநுவர்த்தித்ததாகில் இங்கிருந்த காலத்துக்கு ஸ்வயம்ப்ரயோஜநமாய் ஸ்வரூப ப்ராப்த சேஷ வ்ருத்தி ரூபமான கைங்கர்யம் இருக்கும்படியும்; குறிப்பு – அடுத்த இரண்டு விளக்கங்களில், அடைப்புக்குறிக்குள் இருக்கின்ற எண்கள், அந்தந்த அதிகாரத்தைக் குறிப்பதாகும். அதாவது, அந்த அதிகாரங்களில் கூறப்பட்ட விஷயத்தின் இரத்தினச்சுருக்கமான கருத்தாகும்.
– (1) இவ்விதமாக இந்த ஜீவாத்மா நித்யஸூரிகளைப் போன்றே பகவத் அனுபவத்தை எப்போதும் அனுபவிக்கும் தகுதி கொண்டவனாக உள்ளபோதிலும், எல்லையற்ற காலமாக அதனை இழந்து நிற்கிறான். பின்னர் தனது நிலையை உணர்ந்தவனாக, ஒரு நல்ல ஆசார்யனுடைய ஸம்பந்தத்தை அடைந்து, உண்மை மற்றும் நன்மை ஆகியவற்றை அறிந்து தெளிகிறான். (2) உண்மை மற்றும் நன்மை ஆகியவற்றைக் கூறவல்ல ப்ரமாணங்களின் ஸாரமாக மூன்று ரஹஸ்யங்களே உள்ளன. (3) இந்த மூன்று ரஹஸ்யங்கள் மூலமாக அறியப்படும் விஷயங்களில், “ஆள்பவன் – ஆளப்படும் வஸ்து” என்னும் உறவுமுறையை வெளிப்படுத்தும்விதமாக சேதந அசேதநங்கள் மற்றும் ஈச்வரன் ஆகியோருக்கு இடையே உள்ள “சரீரம் – ஆத்மா” என்பது முக்கியமாக அறியப்படவேண்டியதாக உள்ளது. (4) இத்தகைய ஸம்பந்ததுடன் சேர்த்து, பூர்வாசார்யர்களால் கூறப்பட்ட அர்த்தபஞ்சகமும் அவசியமாக அறியப்படவேண்டிய விஷயமாகிறது. (5) இத்தகைய அர்த்தபஞ்சகத்தில், மூன்று தத்வங்களைத் தனியாகப் பிரித்து அதனைக் குறித்து ஆராய்ந்து அறிதல். (6) இந்த அர்த்தபஞ்சகத்தில், ஸாத்விக சாஸ்த்ரங்களால் ஈச்வரன் என்று கூறப்பட்டவன், “மஹாலக்ஷ்மியின் நாதன்” என்று அறிதல். (7) இந்த மூன்று தத்வங்கள் குறித்து அறிந்தவன், மோக்ஷத்தை விருப்புபவனாக, அதற்கான உபாயத்தைக் கைக்கொள்ள முயலுதல். (8) உபாயத்தைக் கைக்கொள்ளும் அதிகாரிகளுடைய வகைகள். (9) அந்த அதிகாரிகளுக்கு ஏற்றவிதமாக உபாயங்களில் உள்ள பிரிவுகள். (10) இந்த உபாயங்களில், ப்ரபத்தியைக் கைக்கொள்ளும் அதிகாரிக்கு உள்ள சிறப்பான அதிகாரங்கள். (11) ஒருமுறை மட்டுமே இயற்றவேண்டிய இந்த ப்ரபத்தி உபாயத்திற்கு ஏற்றவிதமாக விதிக்கப்பட்ட அங்கங்களுடைய பிரிவுகள். (12) மோக்ஷத்தை விரும்பும் அதிகாரிக்கு ஏற்றதான, அங்கங்களுடன் கைக்கொள்ள வேண்டிய பரந்யாஸ வடிவில் உள்ள அங்கியின் விளக்கம். (13) இவ்விதம் அனைத்து அங்கங்களுடனும் பரந்யாஸம் செய்த ஒருவன், தன்னைக் காப்பாற்றும் அனைத்து பொறுப்புகளையும் ஸர்வேச்வரனிடம் அளித்ததால், செய்யவேண்டியதைச் செய்துவிட்டான் என்னும் காரணத்தால், மேற்கொண்டு எதனையும் செய்ய வேண்டியதில்லை என்னுதல். (14) இத்தகைய நிஷ்டை தனக்கு உண்டானது குறித்து தான் சமாதானத்துடன் இருத்தலுக்கான அடையாளங்கள். (15) ஸம்ஸாரத்தில் உள்ள நிலையைப் பொறுக்க இயலாமல் விரைந்து இந்தச் சரீரம் விழவேண்டும் என்னும் ப்ரார்த்தனைச் செய்யாதவரை தொடர்ந்தபடி உள்ள சரீர காலம் முடிய, தனது பயனாக, தனது ஆத்மஸ்வரூபத்தை அடையவைப்பதாக உள்ள கைங்கர்யம்.