Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 14)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம்

சிஷ்யனுடைய கடமைகள்

மூலம் – ஆகையால் விளக்குப் பிடிக்குமவன், தன்னை ராஜா ஒரு கார்யத்துக்குப் போகச் சொன்னால் தன் கையில் விளக்கை அதுக்கு ப்ராப்தரானார் கையிலே கொடுத்துப் போமாப்போலே, ஸத்பாத்ரமானார்க்குத் தான் சொல்லும்போது தனக்கு உபதேசித்த ஆசார்யனை முற்பட வெளியிட்டு பின்பு தனக்கு உபதிஷ்டமான அர்த்தங்களையே சொல்லவும். சில காரணங்களாலே திவ்ய சக்ஷு: ச்ரோத்ரங்கள் பெற்றுத்தான் இவற்றாலே அறிந்து சொல்லுமவற்றையும், “வ்யாஸ ப்ரஸாதாத் ச்ருதவாந் ஏதத் குஹ்யமஹம் பரம் | யோகம் யோகேச்வராத் க்ருஷ்ணாத் ஸாக்ஷாத் கதயத: ஸ்வயம்” என்கிறபடியே, “ஸதாசார்ய ப்ரஸாதமடியாக இவ் அர்த்தமறிந்தேன். என் கைமிடுக்காலே அறிந்து சொல்லுகிறேனல்லேன்” என்ற இவ்வுண்மையை வெளியிட்டுக் கொண்டு சொல்லவும் பெறில் இவன் சொல்லும் அர்த்தங்களெல்லாம் ஸர்வர்க்கும் ஆதரணீயங்களுமாய், இவன் க்ருதஜ்ஞனாயிருந்தானென்று ஸாத்விகரும் ப்ரசம்ஸித்துப் ப்ரஸாதிக்கும்படியாய் ஸத்யவாதியாயிருந்தானென்று உபநிஷத்துக்களும் ஔபநிஷத பரமபுருஷனும் தங்களோடொக்க இவனைப் ப்ரமாணபூதன் என்று ஆதரிக்கும்படியுமாம். இப்படிக் க்ருதஜ்ஞனாய் அவஹிதனான சிஷ்யனைப் பற்ற நாம் செய்த க்ருஷி பலித்ததென்று ஆசார்யனும் க்ருதார்த்தனாயிருக்கும்.

– அரசன் ஒருவனுக்குக் கைவிளக்கு பிடித்தபடி செல்லும் ஒருவனை வேறு ஒரு செயல் செய்வதற்காக அரசன் அனுப்பினால், அவன் தனக்குப் பதிலாகப் பொறுத்தமான வேறு ஒருவனை கைவிளக்குப் பிடிக்க ஏற்பாடு செய்துவிட்டுச் செல்வதை நாம் காணலாம். இதே போன்று, தனது ஆசார்யன் தனக்கு உபதேசித்து விட்டுச் சென்றதை, தான் ஒரு தகுதியான சிஷ்யனுக்கு உபதேசம் செய்த பின்னர் இறக்கவேண்டும். ஒருவனுக்கு, ஒரு சில காரணங்களால் திவ்யமான பார்வை மற்றும் செவிகள் கிட்டக்கூடும். அதன் விளைவாக அவன் ரஹஸ்யங்களைத் தானாகவே அறியக்கூடும். அவ்விதம் உள்ளபோது அவன், கீதை (18-75) - வ்யாஸ ப்ரஸாதாத் ச்ருதவாந் ஏதத் குஹ்யமஹம் பரம் | யோகம் யோகேச்வராத் க்ருஷ்ணாத் ஸாக்ஷாத் கதயத: ஸ்வயம் – (ஸஞ்ஜயன் கூறுதல்) வ்யாஸருடைய அருளால் தெய்வீகமான பார்வை பெற்ற நான், உயர்ந்த இந்த ரஹஸ்யமான யோகத்தை, யோகேச்வரனாகிய க்ருஷ்ணனிடமிருந்து நேரடியாகவே கேட்டேன் – என்று கூறுவது போன்று, “எனது ஆசார்யனுடைய அருளால் நான் இந்த விஷயங்களை அறிந்தேன். எனது திறமையால் நான் இதனை அறியவில்லை” என்ற உண்மையைக் கூறவேண்டும். இவ்விதம் உரைத்த பின்னர், அவன் கூறும் உபதேசங்கள் அனைத்தும், அனைவராலும் ஏற்கப்படுவதாகவே இருக்கும். மேலும், “இவன் செய்ந்நன்றி மறவாதவன்” என்று சான்றோர்கள் இவனை அனுக்ரஹம் செய்வர். “இவன் ஸத்யத்தை உரைப்பவன் ஆவான்” என்று உபநிஷத்துக்களும், அந்த உபநிஷத்துக்களால் வெளிப்படும் பரமபுருஷனும், “இவன் நம்மைப் போன்றே ப்ரமாணமாகக் கொள்ளத்தக்கவன்” என்று கொண்டாடும்படியாக இருப்பான். மேலும், “இவ்விதம் செய்ந்நன்றி மறவாதவனும், கவனத்துடன் உள்ளவனும் ஆகிய ஒரு சிஷ்யனை அடையவேண்டும் என்று நாம் செய்த முயற்சி பலித்தது” என்று ஆசார்யனும் மகிழ்வார்.