Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 12)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம்
சிஷ்யனுடைய கடமைகள்
மூலம் – யதா ந்யாயம் கேட்டுச் சொல்லச் செய்தே சொல்லும்போது, குருவைப் ப்ரகாசிப்பியாதொழியுமாகில், இவன் சொல்லுகிற அர்த்தங்கள் வேரில்லாக் கொற்றான் போலே அடியற்றவையோ என்று சிஷ்யனுக்கும் அதிசங்கை பிறக்கும்படியாய் அநாதர விஷயமுமாம். “ஸ்வகுரூணாம் ஸ்வசிஷ்யேப்ய: க்யாபநம் சாக்ருதம் ததா” என்று த்வாத்ரிம்சத் அபசார வர்க்கத்திலே குருவைப் ப்ரகாசிப்பியாதொழிகையும் படிக்கப்பட்டது. அப்போது, “குரும் ப்ரகாசயேத்தீமாந் மந்த்ரம் யத்நேந கோபயேத் | அப்ரகாச ப்ரகாசாப்யாம் க்ஷீயேதே ஸம்பதாயுஷீ” என்கிறபடியே ஜ்ஞாந வைசத்ய பூர்வகமான பகவதநுபவ ஸம்பத்தும், ஆத்மாவுக்கு ஸத்தா அநுவ்ருத்தி ஹேதுவான, சேஷத்வ அநுஸந்தாந பூவக ஸ்வநிஷ்டையும் குலையும்படியாம். குருவைப் ப்ரகாசிப்பியா நிற்கச் செய்தே, அவன் பண்ணின சாஸ்த்ரீய உபதேசத்துக்கு விருத்தம் சொல்லுமாகில், விப்ரலம்பகனென்று பேருமாய், “ஜ்யோதிஷாம் வ்யவஹாரம் ச ப்ராயச்சித்தம் சிகித்ஸநம் | விநா சாஸ்த்ரேண யோ ப்ரூயாத் தமாஹுர் ப்ரஹ்மகாதகம்” என்கிறபடியே பாபிஷ்டனுமாம்.
– சரியான முறையில் விண்ணப்பிக்கப்பட்டு உபதேசித்தால் கூட, அவ்வித உபதேசிக்கும்போது, தனது ஆசார்யனைக் குறித்து புகழாமல் ஒருவன் இருந்தால், அவன் கூறுகின்ற உபதேசங்கள் அனைத்தும், “வேர் ஏதும் இல்லாமல் மரத்திலேயே வளரும் கொடி” என்பது போன்று, “இந்த உபதேசங்களில் ஏதேனும் முறை உள்ளதோ” என்று கேட்பவர்களுக்கு சந்தேகம் எழுந்து, அவனை ஒதுக்கக்கூடும். மேலும், ஸ்வகுரூணாம் ஸ்வசிஷ்யேப்ய: க்யாபநம் சாக்ருதம் ததா – தனது சிஷ்யர்களிடம் தனது குருவைக் குறித்து வெளிப்படுத்தாமல் இருத்தல் – என்பது முப்பத்து இரண்டு வகையான அபசாரங்களில் ஒன்றாகும் என, குருவைப் புகழாமல் இருத்தல் என்பது குறித்துக் கூறப்பட்டது. இவ்விதம் ஆகும்போது, சேஷஸம்ஹிதை (14-50) - குரும் ப்ரகாசயேத் தீமாந் மந்த்ரம் யத்நேந கோபயேத் | அப்ரகாச ப்ரகாசாப்யாம் க்ஷீயேதே ஸம்பதாயுஷீ – அறிவுள்ளவன் தனது குருவை வெளிப்படுத்தவேண்டும். மந்த்ரத்தை யத்நம் கொண்டு மறைக்கவேண்டும். குருவை வெளிப்படுத்தாமலும், மந்த்ரத்தை மறைக்காமலும் இருந்தால், ஞானமும் நிஷ்டையும் தேய்கின்றன – என்று கூறுவதற்கு ஏற்ப, தெளிவான ஞானத்துடன் கூடியதான பகவத் அனுபவம் என்னும் செல்வமும், “எனது ஆத்மாவும் ஒரு பொருள்” என்று கூறும்படியாகச் செய்யவல்ல கைங்கர்ய நிஷ்டையும் குறையும். ஒருவன் தனது குருவைப் புகழ்ந்தபடி இருந்தாலும், அவர் செய்த சாஸ்த்ர உபதேசங்களுக்கு முரணாகப் பொருள் கூறினால், “வஞ்சகன்” என்னும் பெயர் உண்டாகும்; மேலும், ஜ்யோதிஷாம் வ்யவஹாரம் ச ப்ராயச்சித்தம் சிகித்ஸநம் | விநா சாஸ்த்ரேண யோ ப்ரூயாத் தமாஹுர் ப்ரஹ்மகாதகம் – ஜோதிடம், நீதி, ப்ராயச்சித்தம், வைத்தியம் ஆகியவற்றுக்கு, அவற்றுக்கு உண்டாகிய சாஸ்த்ரத்திற்கு முரணாகப் பொருள் உரைப்பவனை ப்ரஹ்மஹத்தி செய்தவன் என்றே கூறவேண்டும் – என்பதற்கு ஏற்ப பாபமும் உண்டாகும்.