Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 11)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம்

சிஷ்யனுடைய கடமைகள்

மூலம் – அத்யாத்ம ரஹஸ்யங்களைச் சொல்லுமவன் ஸம்ப்ரதாயமின்றிக்கேயிருக்க ஏடு பார்த்தாதல், சுவறேறிக் கேட்டாதல் சொல்லுமாகில் களவு கொண்டு ஆபரணம் பூண்டாற்போலே கண்டார்க்கெல்லாம் தான் அஞ்சவேண்டும்படியாம். “யத்ருச்சயா ச்ருதோ மந்த்ர: சந்நேநாதச்சலேந வா | பத்ரேக்ஷிதோ வா வ்யர்த்த: ஸ்யாத் ப்ரத்யுதாநர்த்ததோ பவேத்” இத்யாதிகளிற்படியே ப்ரத்யவாய பர்யந்தமுமாம். கேட்டுச் சொல்லச் செய்தே, “தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரச்நேந ஸேவயா”, “ப்ரணிபத்யாபிவாத்ய ச” இத்யாதிகளிற் சொல்லுகிற முறையொழியக் கேட்டுச் சொல்லுமாகில் காலன் கொண்டு ஆபரணம் பூண்டாற்போலே கண்டார் எல்லோரும் தன்னை அருவருக்கும்படியாம். “யச்சாதர்மேண விப்ரூதே யச்சாதர்மேண ப்ருச்சதி | தயோரந்யதர: ப்ரைதி வித்வேஷம் வா அதிகச்சதி” என்கிறபடியே அநர்த்தாவஹமுமாம்.

– ஆழ்ந்த ரஹஸ்யங்களை தானாகவே பல நூல்களைக் கொண்டு அறிந்து கொண்டோ அல்லது அடுத்தவர்கள் கூறுவதை மறைந்து நின்று கேட்டோ அறியும் ஒருவன், அதனை மற்றவர்களுக்கு உபதேசம் செய்ய முற்படும்போது, களவு செய்யப்பட்ட ஆபரணத்தை அணியும் ஒருவன், அனைவரையும் கண்டு அஞ்சுவது போன்று, அச்சத்துடன் இருக்கும் நிலை உண்டாகும்; மேலும், இந்தச் செய்கையானது, பாத்மஸம்ஹிதை - யத்ருச்சயா ச்ருதோ மந்த்ர: சந்நேநாதச்சலேந வா | பத்ரேக்ஷிதோ வா வ்யர்த்த: ஸ்யாத் ப்ரத்யுதாநர்த்ததோ பவேத் – மறைந்து நின்றோ அல்லது நூல்கள் மூலமோ கற்ற விஷயங்கள் பயனை அளிக்காது, தீமையை உண்டாக்கக்கூடும் – என்று கூறுவதற்கு ஏற்ப, பாபத்தையும் உண்டாக்கக்கூடும். முறையாக அறிந்த விஷயங்களை ஒருவன் மற்றொருவனுக்கு உபதேசிக்கும்போது, கீதை (4-34) - தத்வித்தி ப்ரணிபாதேந பரிப்ரச்நேந ஸேவயா – உண்மையை அறிந்தவர்களுடைய கால்களில் விழுந்து வணங்கி அவர்களுக்குத் தொண்டு செய்து – என்றும், ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-1-1) – ப்ரணிபத்ய அபிவாத்ய ச – வணங்கி அபிவாதநம் செய்து – என்றும் கூறுவதற்கு ஏற்ப, தன்னால் உபதேசிக்கப்படும் அந்த மற்றொருவன், தன்னை வணங்குதல் முதலானவற்றைச் செய்யாமல் உள்ளபோதிலும் அவனுக்கு உபதேசம் செய்தால், “தனது ஆயுளை நீட்டிக்கும்விதமாக எள்ளால் செய்யப்பட்ட தனது ஒரு உருவ பொம்மைக்கு ஆபரணங்களை அணிவித்து, அதனைத் தானமாக வழங்க முற்படும்போது, அதனைப் பெறுவதற்கு அனைவரும் அஞ்சுவர்” என்பது போன்று, மற்றவர்கள் அஞ்சும்படியாக நிற்பான். மேலும், மஹாபாரதம் சாந்திபர்வம் (335-51) - யச்சாதர்மேண விப்ரூதே யச்சாதர்மேண ப்ருச்சதி | தயோரந்யதர: ப்ரைதி வித்வேஷம் வா அதிகச்சதி – முறையின்றி உபதேசம் செய்பவன் மற்றும் கற்பவன் ஆகிய இருவரில் ஒருவன் இறப்பான் அல்லது பகைவன் ஆவான் – என்று கூறுவது போன்று தீமை உண்டாகும்.