Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 9)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம்
சிஷ்யனுடைய கடமைகள்
மூலம் – (6) பிறவிக்குருடனான தன்னை அயர்வறுமமரர்கள் பரிஷத்துக்கு அர்ஹனாம்படி திருத்தின மஹோபகாரகனுக்குச் செய்யலாம் ப்ரத்யுபகாரம் இல்லையென்னுமிடத்தைத் தெளிந்து, “ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோ நைவ க்ராமகுலாதிபி: | விஷ்ணுநா வ்யபதேஷ்டவ்ய: தஸ்ய ஸர்வம் ஸ ஏவ ஹி” என்கிற நிலையிலுங்காட்டில், “வஸிஷ்ட வ்யபதேசிந:” என்கிறபடியே சரண்யனான பெருமாள் வம்ச க்ரமாகதமாகப் பிறந்து படைத்துக் கைக்கொண்ட நிலை இந்நிலையென்று பரிக்ரஹித்து “என்னைத் தீ மனம் கொடுத்தாய் உனக்கு என் செய்கேன்?” என்று இருக்கவும் ப்ராப்தம்.
– (6) பிறவியிலேயே ஏதும் அறியாத குருடனாக இருந்த தன்னை, ஞானச்சுருக்கம் ஏதும் இல்லாத நித்யஸூரிகளுக்குச் சமமாகச் சென்று அமரலாம்படியாகத் தகுதி பெறச் செய்து திருத்திய மிகப் பெரிய உபகாரம் செய்தவருக்கு, செய்யத்தக்கதான ப்ரதி உபகாரம் ஏதும் இல்லை என்று அறியவேண்டும். அதன் பின்னர், “விஷ்வக்சேந ஸம்ஹிதை - ஏகாந்தீ வ்யபதேஷ்டவ்யோ நைவ க்ராமகுலாதிபி: | விஷ்ணுநா வ்யபதேஷ்டவ்ய: தஸ்ய ஸர்வம் ஸ ஏவ ஹி - மற்ற தேவதைகளைப் பற்றாத பரமபாகவதனைப் பற்றிக் குறிப்பிடும்போது அவனுடைய ஊர், குலம் முதலானவற்றைக் கொண்டு அவனைக் குறிப்பிடக்கூடாது; அவனுக்கு எம்பெருமானுடன் உள்ள தொடர்பைக் கூறியே கூறவேண்டும்; காரணம், அவனுக்கு அனைத்துமாக எம்பெருமானே அல்லவோ உள்ளான்” என்றுள்ள நிலையைக் காட்டிலும், இராமாயணம் பாலகாண்டம் (19-2) - வஸிஷ்ட வ்யபதேசிந: - வஸிஷ்டரைக் கொண்டு உன்னைக் கூறிக் கொள்கின்ற – என்பதற்கு ஏற்ப, அனைவருக்கும் புகலிடமாக உள்ள இராமனே தனது வம்சத்தை விடுத்து, இவ்விதம் ஆசார்யனைக் கொண்டு அடையாளப்படுத்திக் கொள்வது போன்ற நிலையில் நின்றான் – என்று இந்த நிலையைக் கைக்கொண்டு, திருவாய்மொழி (6-7-8) - என்னைத் தீ மனம் கொடுத்தாய் உனக்கு என் செய்கேன் – என்று ஆசார்யனைக் குறித்து உரைக்கும்படியாக இருத்தல் ஏற்புடையது ஆகும்.