Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 5)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம்
ஆசார்யனுக்குச் செய்யவேண்டிய கைம்மாறு ஏதும் இல்லை
மூலம் – இப்படி இவ்விஷயத்தில் ப்ரத்யுபகாரமில்லை யென்னுமிடத்தை, “ப்ரஹ்மவித்யா ப்ரதாநஸ்ய தேவைரபி ந சக்யதே | ப்ரதிப்ரதாநமபி வா தத்யாத் சக்தித ஆதாராத்” என்று ஸ்ரீசாண்டில்ய பகவான் அருளிச்செய்தான். இதில், “யதா சக்தி தாநம்” சொன்னதுவும் தன் ஆதாரத்துக்குப் போக்குவீடாகச் சொன்னதத்தனை. இவ்வளவைக் கொண்டு ப்ரத்யுபகாரம் பண்ணினானாகத் தன்னை நினைத்திருக்கப்பெறான்.
– இவ்விதமாக, ஆசார்யன் விஷயத்தில் எந்தவிதமான ப்ரதி உபகாரத்திற்கும் இடமே இல்லை என்பதை, சாண்டியஸ்ம்ருதி (1-117) - ப்ரஹ்மவித்யா ப்ரதாநஸ்ய தேவைரபி ந சக்யதே | ப்ரதிப்ரதாநமபி வா தத்யாத் சக்தித ஆதாராத் – ப்ரஹ்மவித்யையை உபதேசித்த ஆசார்யனுக்குக் கைம்மாறு செய்வதற்கு தேவர்களுக்கும் சக்தி இல்லை. ஆனாலும், சிஷ்யன் தனது சக்திக்கு ஏற்ப ஏதேனும் அளிக்கவேண்டும் – என்று கூறியது. இந்த வாக்கியத்தில் உள்ள “யதா சக்தி தாநம் – தனது சக்திக்கு ஏற்ப தானம்” என்பதும் கூட, தான் ஆசார்யன் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துவதற்காகவே ஆகும். இவ்விதம் செய்வதன் மூலம், தான் ஆசார்யனுக்கு ப்ரதி உபகாரம் செய்ததாக எண்ணக்கூடாது.