Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம் (பத்தி 4)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 31.சிஷ்ய க்ருத்ய அதிகாரம்

ஆசார்யனுக்குச் செய்யவேண்டிய கைம்மாறு ஏதும் இல்லை

மூலம் - (3) பகவான் பக்கல் போலே ஆசார்யன் பக்கலிலே வர்த்திப்பானென்றும், அவனுக்கு நல்லனானாற்போலே ஆசார்யனுக்கும் நல்லனாயிருப்பானென்றும் வேதாந்தங்களிற் சொன்னதும்; “ந ப்ரமாத்யேத் குரௌ சிஷ்யோ வாங்மந:காய கர்மபி: | அவிபஜ்யாத்மநா ஆசார்யம் வர்த்தேத அஸ்மிந் யதா அச்யுதே”, “தேவமிவாசார்யம் உபாஸீத” என்று சாண்டில்ய ஆபஸ்தம்பாதிகள் சொன்னதுவும் ஆசார்யனுக்கு ப்ரத்யுபகாரம் சொன்னபடியன்று; சாஸ்த்ர சக்ஷுஸ்ஸான இவன் விழிகண் குருடனாகாமைக்கும் பகவதநுபவம் போலே விலக்ஷணமான இவ் அநுபவத்தை ஜந்ம பிக்ஷுவான இவன் இழவாமைக்கும் சொல்லிற்றத்தனை.

– “பகவானிடம் எவ்விதம் நடந்துகொள்வானோ அதே போன்று ஆசார்யனிடமும் இருத்தல் வேண்டும்” என்றும், “பகவானிடம் கொண்டுள்ள பக்தியைப் போன்றே ஆசார்யனிடம் பக்தியுடன் இருத்தல்வேண்டும்” என்றும் வேதாந்தங்களில் உபதேசிக்கப்பட்டது. இதனைப் போன்றே, சாண்டில்ய ஸ்ம்ருதி (1-118) - ந ப்ரமாத்யேத் குரௌ சிஷ்யோ வாங்மந:காய கர்மபி: | அவிபஜ்யாத்மநா ஆசார்யம் வர்த்தேத அஸ்மிந் யதா அச்யுதே – சிஷ்யன் ஒருவன் தனது ஆசார்யன் விஷயத்தில் வாக்கு, மனம், சரீரம் ஆகியவற்றால் அபராதம் செய்யக்கூடாது. ஆசார்யனைத் தன்னிடமிருந்து வேறுபடுத்திக் காணாமல், அச்யுதனிடம் நடப்பது போன்றே நடக்கவேண்டும் – என்றும், ஆபஸ்தம் ஸூத்ரம் (1-2-6-13) - தேவமிவாசார்யம் உபாஸீத – பகவானைப் போன்றே ஆசார்யனையும் உபாஸிக்கவேண்டும் – என்றும் கூறப்பட்டன. இந்த உபதேசங்கள் அனைத்தின் மூலமும், “ஆசார்யனுக்கு ப்ரதி உபகாரம் செய்யவேண்டும்”, என்பது கூறப்படவில்லை. மாறாக, சாஸ்த்ரங்களை மட்டுமே கண்களாகக் கொண்டு அறியவேண்டிய சிஷ்யன் ஒருவன், தனது கண்கள் இருந்தும் குருடன் போன்று இல்லாமல், பகவத் அனுபவம் போன்றே வேறுபட்டதாக உள்ள ஆசார்ய அனுபவத்தை இதுவரை இழந்து நின்றது போன்று இனியும் இழக்காமல் இருப்பதற்காகவே கூறப்பட்டன.