Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 168)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
சரம ச்லோகத்தின் திரண்ட பொருள்
மூலம் – “(1) அல்பஜ்ஞனாய், அல்பசக்தியாய், பரிமித காலவர்த்தியாய், விளம்ப க்ஷமனுமன்றிக்கேயிருக்கிற உன்னாலே அறியவும் அநுஷ்டிக்கவும் அரிதாய்ப் பல விளம்பமுமுண்டாயிருக்கிற உபாயாந்தரங்களில் அலையாதே. (2) ஸர்வஸுலபனாய், ஸர்வலோக சரண்யனாய், சரண்யத்வ உபயுக்த ஸர்வாகார விசிஷ்டனான என்னையொருவனையுமே (3) அத்யவஸித்துக் கொண்டு, அங்க பஞ்சக ஸம்பந்நமான ஆத்மரக்ஷா பரஸமர்ப்பணத்தைப் பண்ணு. (4) இப்படி அநுஷ்டிதோபாயனாய், க்ருதக்ருத்யனாய், எனக்கு அடைக்கலமாய், அத்யர்த்த ப்ரியனான உன்னை, (5) பரமகாருணிகனாய், ஸுப்ரஸந்நனாய், நிரங்குச ஸ்வாதந்த்ர்யனாய், ஸ்வார்த்த ப்ரவ்ருத்தனான நானே என் ஸங்கல்ப மாத்ரமே துணையாகக் கொண்டு, (6) பஹுப்ரகாரமாய், அநந்தமாய், துரத்யயமான ஸர்வ விரோதி வர்க்கத்தோடும் பின் தொடர்ச்சியில்லாதபடி துவக்கறுத்து, என்னோடொக்க என்னுடைய ஆத்மாத்மீயங்களை யெல்லாம் அநுபவிக்கையாலே துல்யபோகனாக்கிப் பரிபூர்ண அநுபவ பரீவாஹ ரூபமான ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தோசித ஸர்வவித கைங்கர்யத்தையும் தந்து உகப்பன். (7) நீ ஒன்றுக்கும் சோகிக்க வேண்டா”, என்று சரமச்லோகத்தில் திரண்ட பொருள்.
[மேலே உள்ளவற்றில் காணப்படும் எண்கள், சரம ச்லோகத்தில் உள்ள அந்தந்த பதங்களுடைய ஆழ்பொருள் ஆகும். அவையாவன - (1) ஸர்வ தர்மாந் பரித்யஜ்ய, (2) மாம் ஏகம், (3) சரணம் வ்ரஜ, (4) த்வா, (5) அஹம், (6) ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி, (7) மா சுச: - என்பவை ஆகும்] சரமச்லோகத்தின் திரண்ட பொருள் என்னவென்றால்: (1) அற்பமான ஞானம் கொண்டவனாகவும், அற்பமான சக்தி கொண்டவனாகவும், குறுகிய ஆயுள் கொண்டவனாகவும், மோக்ஷம் என்னும் பலனைப் பெறுவதில் உள்ள காலதாமதத்தைப் பொறுக்க இயலாதவனாகவும் நீ உள்ளாய். இப்படிப்பட்ட நீ, உன்னால் அறிவதற்கும் பின்பற்றுவதற்கும் மிகவும் கடினமானதாகவும், பலனைப் பெற்றுத் தருவதில் மிகவும் தாமதத்துடன் கூடியதாகவும் உள்ள மற்ற உபாயங்களை நாடாமல் இருப்பாயாக. (2) அனைவராலும் எளிதாக அடையலாம்படி உள்ளவனும், அனைத்து லோகங்களும் சரணம் புகுபவனாகவும், அனைவரும் வந்து சரணம் புகுவதற்கு வேண்டிய அனைத்து தன்மைகளையும் கொண்டவனாகவும் உள்ள என்னை மட்டுமே. (3) நீ கைக்கொண்டு (அல்லது பின்பற்றி), உன்னுடைய ஆத்மாவைக் காப்பாற்றும்படியாக, உனது அனைத்து பாரங்களையும், ஐந்து அங்கங்களுடன் கூடியதான ப்ரபத்தியைச் செய்வாயாக. (4) இப்படியாக இந்த உபாயத்தைக் கைக்கொண்டவனாகவும், செய்யவேண்டியதைச் செய்தவனாகவும், என்னால் காக்கப்பட வேண்டியவனாகவும், எனக்கு மிகவும் ப்ரியமானவனாகவும் உள்ள உன்னை. (5) மிகுந்த கருணை நிறைந்தவனும், க்ருபை நிறைந்தவனும், சுருக்கம் அடையாத சுதந்திரமானவனும், எங்கும் நிறைந்தவனும் ஆகிய நான், எனது ஸங்கல்பத்தை மட்டுமே துணையாகக் கொண்டு. (6) பலவிதமாக உள்ளதும், எண்ணற்றதும், கடப்பதற்கு அரியதும் ஆகிய அனைத்துவிதமான தடைகளும் (அல்லது விரோதிகளும்) உன்னைப் பின்தொடராதபடி அவற்றை அடியுடன் விலக்குவேன். தொடர்ந்து என்னையும், எனது எல்லாவற்றையும் நீ அனுபவிக்கும்படி நான் செய்வதால், எனக்கு சமமாக அனைத்து இன்பங்களையும் நீ அனுபவிப்பாய். மேலும் உன்னுடைய இந்த அனுபவமானது அனைத்து இடங்கள், அனைத்து காலங்கள், அனைத்து நிலைகள் ஆகியவற்றில் அனைத்துவிதமான கைங்கர்யங்களையும் செய்வதான பரிபூர்ணமான ரூபம் கொண்டதாகவே இருக்கும்படியாக நான் மகிழ்வுடன் அளிப்பேன். (7) நீ எதனைக் குறித்தும் சோகம் அடையவேண்டாம்.