Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 165)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“மா சுச:” என்னும் சொற்றொடருக்குப் பத்துவிதமான பொருள்கள்

மூலம் – இப்படி ஸர்வப்ரகார சோக ஹேதுக்களும் கழியும்படி எனக்கு அநுக்ரஹ விஷய பூதனான நீ இனி சோகிக்கையாவது முன்பு நிக்ரஹ விஷய பூதனாய் நின்ற தசையில் சோகியாதாப் போலே அநிபுண க்ருத்யமாய் இவ் உபாய விசேஷ வைலக்ஷண்யத்துக்கும் ரக்ஷணபரமேறிட்டுக் கொள்ளுகிற ஸித்தோபாய பூதனான என் ப்ரபாவத்துக்கும் என் பக்கலிலே ஸர்வபரந்யாஸம் பண்ணிக் க்ருதக்ருத்யனாயிருக்கிற உன் நிலைக்கும் தகுதியன்றென்று திருவுள்ளம்.

– இவ்விதம் உனது அனைத்துவிதமான சோகங்களும் நீங்கும்படியாக எனது அனுக்ரஹத்தை நீ பெற்றாய். ஆகவே இனி நீ சோகம் அடைதல் என்பது, ப்ரபத்திக்கு முன்பாக நீ செய்யும் தவறுகளால் எனது தண்டனைக்கு உள்ளாவாய் என அறிந்திருந்தும் சோகம் அடையாமல் அப்போது இருந்தது போன்று மூடத்தனமே ஆகும். ப்ரபத்தியின் பின்னர் சோகம் கொள்ளுதல் என்பது, “ப்ரபத்தி உபாயத்தின் மேன்மை, உன்னுடைய பொறுப்புகள் அனைத்தையும் என் மீது ஏற்றுக் கொள்கின்ற ஸித்தோபாயனாகிய எனது ப்ரபாவம், என்னிடம் உனது பாரங்கள் அனைத்தையும் ஒப்படைத்த பின்னர் செய்யவேண்டியதைச் செய்தவனாக நிற்கும் உன்னுடைய நிலை” ஆகிய அனைத்திற்கும் ஏற்புடையதன்று.