Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 162)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“மா சுச:” என்னும் சொற்றொடருக்குப் பத்துவிதமான பொருள்கள்

மூலம் – (8) கர்மயோகம் முதலான நிவ்ருத்தி தர்மங்களெல்லாம் “ந இஹ அபி க்ரம நாச: அஸ்தி” இத்யாதிகளிற்படியே இட்டபடை கற்படையாகையாலும், இச் சரணாகதனைப் பற்ற விசேஷித்து “ந த்யஜேயம் கதஞ்சந” என்கையாலும், த்ருப்த ப்ரபந்நனுக்கும் கோரின காலத்தளவு விளம்பித்தாலும் பலஸித்தியில் ஸம்சயமில்லாமையாலே, “யஜ்ஞ: அந்ருதேந க்ஷரதி தப: க்ஷரதி விஸ்மயாத் | ஆயுர் விப்ரபரீவாதாத் தாநம் ச பரிகீர்த்திநாத்” இத்யாதிகளிற்படியே, ஸுக்ருத நாசகங்களாயிருப்பன சில துஷ்க்ருதங்களாலே இப் ப்ரபத்தி ரூபமான ஸுக்ருதம் நசித்துப் பலம் கிடையாதொழியில் செய்வதென் என்று சோகிக்க வேண்டா.

– மறுமைப் பயனை அளிக்கவல்லதான கர்மயோகம் முதலான கர்மங்கள் அனைத்தும் கீதை (2-40) - ந இஹ அபி க்ரம நாச: அஸ்தி – கர்மயோகத்தில் தொடங்கப்பட்ட எதுவும் அழிவதில்லை – என்று கூறுவதற்கு ஏற்ப அஸ்திவாரம் இட்டது கல்லைக் கொண்டு என்பதால் பலனை நிச்சயமாக அளித்தே தீரும் என்பதாலும், சரணம் புகுந்த இவனைக் குறித்து இராமாயணம் யுத்தகாண்டம் (18-4) - ந த்யஜேயம் கதஞ்சந – நான் ஒருபோதும் கைவிடேன் – என்று உறுதியுடன் உள்ளதாலும், ப்ரபந்நன் ஒருவன் விணப்பித்த காலம் முடிய மோக்ஷம் என்பது தாமதமானால் கூட பலன் கிட்டுமோ என்னும் ஐயம் தேவையில்லை. ஆகவே மநுஸ்ம்ருதி (4-27) - யஜ்ஞ: அந்ருதேந க்ஷரதி தப: க்ஷரதி விஸ்மயாத் | ஆயுர் விப்ரபரீவாதாத் தாநம் ச பரிகீர்த்திநாத் – யாகமானது பொய் உரைப்பதாலும், தவமானது கர்வம் அடைவதாலும், ஆயுளானது அந்தணர்களைத் தூஷிப்பதாலும், தானமானது தானே வெளிப்படுத்திக்கொள்வதாலும் அழிகின்றன – என்று கூறுவதற்கு ஏற்ப நற்செயல்களாக உள்ள சிலவற்றை அழிப்பதாக தீமையான செயல்கள் உள்ளது போன்று, இந்தப் ப்ரபத்தி ரூபமான நற்செயலானது அழிந்து, பலன் கிட்டாமல் போனால் என்ன செய்வது என்று சோகம் கொள்ளவேண்டாம்.