Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 160)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“மா சுச:” என்னும் சொற்றொடருக்குப் பத்துவிதமான பொருள்கள்

மூலம் – (6) இப்படி நிரபராதமான உத்தரக்ருத்யத்தை அபேக்ஷியாதார்க்கும் மேல் புத்தி பூர்வ அபராதம் வந்தாலும் “ந த்யஜேயம் கதஞ்சந” என்று இருக்கக்கடவ, சரண்யன் இவனுக்கு அநுதாபத்தை உண்டாக்கிப் புந:ப்ரபத்தியாகிற ப்ராயச்சித்த விசேஷத்திலே மூட்டியும், அதுவும் கைதப்பும்படியான கடின ப்ரக்ருதிகளுக்கு சிக்ஷாரூபங்களான உபக்லேச மாத்ரங்களைக் காட்டி மேல் அபராதம் பண்ணாதபடி விலக்கியும், பலங்கோரின காலத்துக்கு முன்பே கண்ணழிக்கையாலே ப்ரபந்நனுக்கு மின்னொளி போலே தோற்றி நிலைநில்லாதே போகிற புத்தி பூர்வ அபராத லேசங்களாலே நரகாதி மஹாக்லேசங்கள் வரில் செய்வதென் என்று சங்கித்து சோகிக்க வேண்டா.

– ஒருவன் தனது ப்ரபத்தி காலத்தில், “பின்னால் வரும் வாழ்நாள் முழுவதும் எந்தவிதமான அபராதங்களையும் செய்யாமல் இருப்பேனாக”, என்று ப்ரார்த்தனை செய்யாமல் இருந்தான் என்றாலும், அவனுக்கு ப்ரபத்தியின் பின்னர் அபராதங்கள் வந்து சேர்ந்தாலும், ஸர்வேச்வரன் இராமாயணம் யுத்தகாண்டம் (18-4) - ந த்யஜேயம் கதஞ்சந – நான் ஒருபோதும் கைவிடேன் – என்று கூறினாலும், அந்த மனிதனுடைய மனதில் “நாம் தவறு செய்துவிட்டோம்” என்னும் எண்ணத்தை உண்டாக்கி, அவனை மீண்டும் ப்ரபத்தி என்னும் ப்ராயச்சித்தம் செய்யும்படியாகச் செய்கிறான். அதனையும் செய்யாமல் இருக்கின்ற சில கடினமான மனிதர்களுக்கு ஒரு சில சிறிய தண்டனைகளை அளித்து, அவர்கள் மீண்டும் அபராதங்களைச் செய்யாமல் இருக்கும்படியாக மாற்றுகிறான். அவன் பலன் பெறுவதற்கும் முன்பாகவே அவனிடம் உள்ள அனைத்து தவறுகளையும் நீக்குகிறான். ஆகவே அவனால் செய்யப்பட்ட அனைத்துவிதமான அபராதங்களும் வானில் தோன்றி மறையும் மின்னல் போன்றே உள்ளதால், “முன்பு செய்த அபராதங்களுடைய விளைவால் நரகம் ஏற்பட்டால் என்ன செய்வது?”, என்னும் சந்தேகத்தால் துக்கம் அடையவேண்டாம்.