Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 159)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“மா சுச:” என்னும் சொற்றொடருக்குப் பத்துவிதமான பொருள்கள்

மூலம் – (5) பகவத் கைங்கர்யாதிகளுக்கு அநர்ஹதையையுண்டாக்கும் புத்தி பூர்வ மஹா பாகவத அபசாராதிகளை விளைவித்து தக்தபடம் போலேயாக்கவல்ல ப்ராரப்த பலமான பாப விசேஷத்துக்கு அஞ்சி ப்ரதம ப்ரபத்தி காலத்திலேயாதல், பின்பு ஒரு கால் அதுக்காகப் ப்ரபத்தி பண்ணியாதல் நிரபராதமான உத்தரக்ருத்யத்தை அபேக்ஷித்தால் மேல் அபராத ப்ரஸங்கத்தையும் பற்ற சோகிக்கவேண்டா.

– ப்ரபத்திக்குப் பின்னர், பலன் அளிக்கத் தொடங்கிவிட்ட கர்மங்களின் விளைவாக, மஹாபாகவதர்களிடம் அறிந்து கொண்டே சில அபசாரங்கள் உண்டாகலாம். அவை பகவத் கைங்கர்யம் செய்யும் தகுதியை இழக்கும்படிச் செய்து, எரிந்த துணி போன்று பயனற்றதாக்குகின்றன. ஆகவே இவற்றுக்கு அச்சம் கொண்டு, ப்ரபத்தி செய்யும் அந்த நேரத்திலேயே, வருங்காலத்தில் எந்தவிதமான அபராதங்களும் இல்லாத கைங்கர்யங்களையும் ஸங்கல்பம் செய்யவேண்டும். அந்த நேரத்தில் செய்யத் தவறினால், அதற்காக ஒரு ப்ரபத்தியை பின்னர் செய்து கொள்ளலாம். இவ்விதம் செய்யும்போது வருங்காலத்தில் அபராதங்களுடைய ஸம்பந்தம் உண்டாகாது. ஆகவே ப்ரபத்திக்குப் பின்னர் அபராதங்கள் உண்டாகுமோ என்று சோகம் அடையவேண்டாம்.