Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 156)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

“மா சுச:” என்னும் சொற்றொடருக்குப் பத்துவிதமான பொருள்கள்

மூலம் – (2) இவ் உபாய விசேஷம் ஸபரிகரமாக க்ஷணகால ஸாத்யமாய், ஸுகரமாய், ஆவ்ருத்தி நிரபேக்ஷமாய், உபாயாந்தர வ்யவதாநமும் துஷ்கர பரிகராந்தரமுமின்றிக்கே இருப்பதாய், கோலின காலத்திலே அபேக்ஷித பலங்கள் எல்லாவற்றையும் தரவற்றாயிருக்கையால், ஆகிஞ்சந்யமும் பல விளம்ப பயமுமுடைய நமக்கு ஸபரிகரமாக சிரகால அநுவர்த்தநீயமாய் அத்யந்த அவஹிதர்க்கும் க்ருச்ரஸாத்யமாய்த் ததாவித பரிகராந்தர ஸாபேக்ஷமாய்ப் பல விளம்பமுமுடைத்தான உபாயாந்தரத்திலே அலைய வேண்டுகிறதோவென்று சோகிக்கவேண்டா.

– இந்த ப்ரபத்தி உபாயம் என்பது அங்கங்களுடன் கைக்கொள்ள மிகவும் எளிதாகவும், ஒரே க்ஷணத்தில் செய்யக்கூடியதாகவும், மீண்டும் மீண்டும் செய்யவேண்டும் என்று எதிர்பாராமல் உள்ளதாகவும், மற்ற உபாயங்கள் மற்றும் அங்கங்கள் ஆகியவற்றை எதிர்பாராமலும், கடினமான அங்களைக் கொள்ளாமல் உள்ளதாகவும், நாம் விரும்பும் அந்த நொடியிலேயே அனைத்து பலன்களையும் தரவல்லதாகவும் உள்ளது. ஆகவே வேறு எந்தவிதமான உபாயத்தைக் கைக்கொள்ளவும் தன்னிடம் சக்தி இல்லை என்றும், பலன் அளிக்கத் தாமதம் ஆகுமோ என்றும் அச்சம் கொள்ளும் நமக்கு, “அனைத்து அங்கங்களுடன் நீண்டகாலம் கைக்கொள்ள வேண்டியதாகவும், மிகவும் கவனத்துடன் உள்ளவர்களாலும் கூடக் கைக்கொள்ள கடினமானதாகவும், அனைத்து அங்கங்களுடன் செய்யவேண்டியதாகவும், பலன் அளிப்பதில் காலதாமதத்துடன் கூடியுள்ளதாகவும் உள்ள மற்ற உபாயங்களைக் கைக்கொள்ள வேண்டுமோ?” என்று சோகம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.