Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 154)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
சோகத்திற்கான காரணங்கள்
மூலம் – இங்கு சொல்லுகிற சோக நிவ்ருத்திக்கு ஒருபடியாலும் ஸங்கோசகரில்லாமையாலே இவ் உபாய விசேஷ ஜ்ஞாநத்தாலும் அநுஷ்டாநத்தாலுமாக ஸர்வ ப்ரகார சோக ஹேதுக்களெல்லாம் கழியும்படிச் சொல்லிற்றாகிறது. அநுஷ்டாந பர்யந்தமல்லாத ஜ்ஞாநமாத்ரம் இவ் உபதேசத்தாலே பிறந்தாலும், “ந காதா காதிநம் சாஸ்தி பஹு சேதபி காயதி | ப்ரக்ருதிம் யாந்தி பூதாநி குலிங்க சகுநிர்யதா” என்கிற கணக்காய் நிஷ்ப்ரயோஜநமாகையாலே, ஜ்ஞாந அநுஷ்டாநங்கள் இரண்டினுடையவும் பலமான சோகநிவ்ருத்தியையெல்லாம் இங்கு விவக்ஷிக்கிறது. ஆகையால், உபாயாநுஷ்டானத்தில் பூர்வ அபர மத்ய தசைகளைப் பற்ற ஸம்பாவிதமான சோகமெல்லாம் இங்கே கழிக்கப்படுகின்றன. எங்ஙனேயென்னில் அதிகாரி விசேஷத்தையும், உபாய விசேஷத்தையும் உத்தரக்ருத்ய விசேஷத்தையும், பரிபூர்ண கைங்கர்ய பர்யந்த பல ஸித்தியையும் பற்றப் பல படியாக சோகம் ஸம்பாவிதம்.
– சரமச்லோகத்தில் கூறப்படுவதான “சோகம் விலகுதல்” என்பதற்கு எந்தவிதமான சுருக்கமும் இல்லை. ஆகவே இந்த உபாயத்தைக் குறித்த ஞானம் மற்றும் இதனைக் கைக்கொள்ளுதல் ஆகியவை மூலம் ஒருவனுடைய அனைத்துவிதமான சோகங்களும் (அவற்றுக்கான காரணங்களுடன் சேர்ந்து) விலகும் என்பது கூறப்பட்டதாகிறது. இங்கு கூறப்பட்ட உபதேசம் மூலம் இந்த உபாயத்தைக் கைக்கொள்ளாமல், இதனைக் குறித்த வெறும் ஞானம் மட்டும் ஏற்பட்டால், மஹாபாரதம் சாந்திபர்வம் (42-21) - ந காதா காதிநம் சாஸ்தி பஹு சேதபி காயதி | ப்ரக்ருதிம் யாந்தி பூதாநி குலிங்க சகுநிர்யதா – சாஸ்த்ரமானது, தன்னைப் பலமுறை படித்தவனைத் திருத்த இயலவில்லை. குலிங்கம் என்னும் பறவையானது சிங்கத்தின் வாயில் உள்ள உணவை எடுத்தல் என்னும் விபரீதமான நோக்கம் கொண்டதாக உள்ளது போன்று, இங்குள்ள அனைத்து உயிர்களும் தங்களுடைய பூர்வ வாஸனையை விடாமல் உள்ளன – என்பதற்கு ஏற்ப, அத்தகைய ஞானத்தால் எந்தவிதமான பயனும் இல்லை. ஆகவே, சோகம் விலகுவதற்கு இந்த உபாயத்தைக் குறித்த ஞானமும், அதனைக் கைக்கொள்ளுதலும் ஆகிய இரண்டும் அவசியமே என்று இந்த ச்லோகம் கூறுகிறது. எனவே உபாயத்தைக் கைக்கொள்ளும் விஷயத்தில், உபாயத்தைக் கைக்கொள்ளும் முன்போ நடுவிலோ அல்லது பின்போ உண்டாகும் சோகங்கள் அனைத்தும் நீக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. எப்படி என்றால், “உபாயத்தைக் கைக்கொள்ளத் தனக்கு உள்ள தகுதி, உபாயத்தின் வலிமை, ப்ரபத்தி உபாயத்திற்குப் பின்னர் செய்யவேண்டியவை, பரிபூர்ணமான கைங்கர்யம் முடிய இறுதியாகக் கிட்ட உள்ள பலன்” ஆகியவற்றைக் குறித்து எண்ணுவதால் மட்டுமே சோகம் ஏற்படுவதால் ஆகும்.