Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 152)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

மூலம் – இப்படி ஆர்த்தன், த்ருப்தன் என்கிற பிரிவும் இவனுக்குப் பிறந்த சோகத்தில் வைஷம்யமடியாகச் சொல்லுகிறதத்தனை; ஒருவனுக்கு சோகமில்லாமையன்று. ஜந்மாந்தராதிமாத்ரம் சோக நிமித்தமாய் ஏதேனுமொரு நாள் மோக்ஷம் பெறுவோமென்று தேறியிருக்குமவன் இங்கு த்ருப்தன்; அல்லது உத்க்ருஷ்ட ஜந அவமாநாதி ஹேதுவான கர்வ ரூபமான அநாத்ம குணத்தையுடையவனல்லன். இச் சரீரத்தில் சதுர்முக ஐச்வர்யம் பெற்றாலும் இது பரிபூர்ண பகவதநுபவ விரோதியானபடியாலே இவ் வர்த்தமாந தேஹ ஸம்பந்தமுங்கூட மஹாக்நி போலே துஸ்ஸஹமாய், “உடலும் உயிரும் மங்கவொட்டு” என்னும்படி, ப்ரபத்யநுஷ்டாந அநந்தரம் க்ஷண மாத்ர விளம்ப க்ஷமனல்லாதவன் ஆர்த்த ப்ரபந்நன்; அல்லது “ஆர்த்தோ ஜிஜ்ஞாஸு: ஆர்த்தார்த்தீ” என்கிறவிடத்தில் சொல்லப்பட்டவனல்லன். “ஆர்த்தோ வா யதி வா த்ருப்த:” என்கிறவிடம் அதிவாதமென்பார்க்கும் இங்கு இவ் அர்த்த ஸ்திதியில் விவாதம் பண்ணவொண்ணாது. உபாய அநுஷ்டானத்திற்குப் பின்பு பலமாகையாலும் இது உபதேச வேளையாகையாலும் இவ் ஆர்த்தன் திறத்திலும் “மோக்ஷயிஷ்யாமி” என்ற பவிஷ்யத் நிர்தேசத்துக்குக் குறையில்லை.

– இவ்விதமாக ப்ரபந்நர்களை “ஆர்த்தன், த்ருப்தன்” என்று இரண்டாகப் பிரித்தல் என்பது, அவரவர்களுடைய சோகத்தின் அளவைப் பொறுத்தே ஆகும்; த்ருப்தனுக்குச் சோகம் இல்லை என்று கொள்ளக்கூடாது. த்ருப்தன் என்பவன், அடுத்த பிறவி ஏற்படக்கூடும் என்று எண்ணுவதால் மட்டுமே சோகம் கொள்பவன் ஆவான்; “நான் ஏதேனும் ஒருநாளில் மோக்ஷம் அடைவேன்” என்ற விச்வாஸத்துடன் காத்திருப்பவன் ஆவான்; இவன், உயர்ந்த பிறவி எடுத்துள்ளபோதிலும் அவமானம் அடைவதற்குக் காரணமாக உள்ள கர்வம் முதலான அநாத்ம குணங்களைக் கொண்டவன் அல்லன். ஆர்த்த ப்ரபந்நன் என்பவன் – இந்தச் சரீரத்தில் உள்ளபோது நான்முகன் பதவி கிடத்தாலும் கூட, அந்தப் பதவியானது பரிபூர்ணமான பகவத் அனுபவம் உண்டாவதற்கு இடையூறாக இருக்கும் என்று எண்ணுபவன்; தன்னுடைய தற்போதுள்ள சரீர ஸம்பந்தம் கூட கொளுத்தும் அக்னி போன்று வருத்துவதாக எண்ணுபவன்; ஆகவே ப்ரபத்திக்குப் பின்னர் ஒரு க்ஷணம் கூட உயிருடன் இருப்பதற்குப் பொறுக்காதவன்; திருவாய்மொழி (10-7-9) - உடலும் உயிரும் மங்கவொட்டு – எனது சரீரத்தையும் உயிரையும் எடுப்பாயாக – என்னும்படி விண்ணப்பம் செய்பவன் ஆவான். அல்லது கீதையில் (7-16) - ஆர்த்தோ ஜிஜ்ஞாஸு: ஆர்த்தார்த்தீ - தான் இழந்ததை செல்வங்களைப் பெறத் துடிப்பவன் ஆர்த்தன் – என்பதில் கூறப்பட்டவன் அல்லன் எனலாம். ஒரு சிலர், இராமாயணம் யுத்தகாண்டம் (18-28) - ஆர்த்தோ வா யதி வா த்ருப்த: - ஆர்த்தன் மற்றும் த்ருப்தன் என்று யாராக இருந்தாலும், சரணாகதி அடைந்தால் காப்பாற்றப்பட வேண்டியவனே ஆகிறான் – என்னும் வாக்கியத்தில் கர்வத்துடன் கூடிய த்ருப்தனும் காப்பாற்றப்பட வேண்டியவன் என்று கூறப்படுவதால், இது மிகைப்படுத்தப்பட்ட வாக்கியம் என்பர்; ஆனால் இங்கு கூறப்பட்ட பல விஷயங்களையும் நோக்கும்போது, இவ்விதம் வாதம் செய்வது பொருந்தாது. கீதையில் (18-66) – மோக்ஷயிஷ்யாமி – நான் உன்னை விடுவிப்பேன் – என்று எதிர்கால வினையைப் பயன்படுத்திய செயலானது, ஆர்த்தன் விஷயத்தில் பொருந்தாது (காரணம் அவன் அப்போதே மோக்ஷம் அடையவேண்டும் என்று எண்ணுபவன்) என்ற சந்தேகம் எழலாம்; ஆனால் அத்தகைய முடிவு என்பது உபாயத்தைக் கைக்கொண்ட பின்னரே உண்டாகும் என்பதாலும், அத்தகைய உபாயம் குறித்த உபதேசம் நடைபெற்றுக் கொண்டிருப்பதாலும், இவ்விதம் உரைப்பது பொருத்தமே ஆகும்.