Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 148)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
ஆர்த்த ப்ரபந்நன் மற்றும் த்ருப்த ப்ரபந்நன் குறித்த விளக்கங்கள்
மூலம் – “மா சுச:” என்கிற இதுவே சோக நிமித்தமானவையெல்லாம் மோசநீயமாகைக்கு நியாமகமாகையாலே ப்ராரப்த கர்மத்திலும் சோக நிமித்தாம்சமெல்லாம் கழிகையால் ஆர்த்தி அதிசயமுடையவனுக்கு அப்போதே மோக்ஷம் ஸித்திக்கும். “மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்” இத்யாதிகளிற்படியே ப்ராரப்த கர்மத்திலும் மேலுள்ளதெல்லாம் கழிந்து இச் சரீராவஸநத்திலே மோக்ஷமென்று இசைய வேண்டியதால், இச் சரீரந் தன்னிலும் ஆயுச்சேஷம் அநிஷ்டமானபோது இதுவும் ப்ரபத்தி வசீக்ருத ஸர்வசக்தி ஸங்கல்பத்தாலே கழியக் குறையில்லையிறே.
– குறிப்பு – அப்போதே மோக்ஷம் பெறவேண்டும் என்று ப்ரபத்தி செய்பவன் ஆர்த்த ப்ரபந்நன் ஆவான். சரீரத்தின் முடிவில் மோக்ஷம் பெறவேண்டும் என்று ப்ரபத்தி செய்பவன் த்ருப்த ப்ரபந்நன் ஆவான். இதனைக் குறித்து மேலும் விளக்கங்கள் பின்னர் அளிக்கப்பட்டுள்ளன. கீதை (18-66) – மா சுச: - வருத்தம் அடையாதே – என்னும் சொற்களே அனைத்துவிதமான சோகத்திற்கும் காரணமாக உள்ளவற்றை நீக்குவதற்குத் தகுதியாக உள்ளன. பலன் அளிக்கத் தொடங்கிவிட்ட கர்மங்கள் மூலமாக உண்டாகவல்ல சோகங்களும் கூட, இதன் மூலம் நீங்குகின்றன. ஆகவே, மிகுந்த சோகத்தில் உள்ள ஒருவனுக்குக் காலதாமதம் உண்டாகாமல் அப்போதே (அவன் விரும்பினால்) மோக்ஷம் அளிக்கிறது. திருவாய்மொழி (9-10-5) - மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான் – என்பதற்கு ஏற்ப, பலன் அளிக்கத் தொடங்கிவிட்ட கர்மங்களில் இதுவரை கழியாமல் உள்ள கர்மங்கள் அனைத்தும் விலகி, இந்தச் சரீரம் விழும்போது மோக்ஷமானது கிட்டும் என்ற நம்பிக்கை வேண்டும். இந்தச் சரீரம் உள்ளபோதே, இதன் மீதம் உள்ள ஆயுட்காலம் என்பது விருப்பம் இல்லாததாக இருந்தால், ப்ரபத்தி மூலம் அடையப்பெற்றதான அனைத்து சக்திகளும் கொண்ட ஸர்வேச்வரனுடைய க்ருபையின் விளைவாக, அவனுடைய ஸங்கல்பத்தால், இந்தச் சரீரமும் நீங்குவதில் குறையில்லை.