Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 147)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
ப்ரபந்நனுக்கு துக்கம் விலகுதலும், துயரமும் பரஸ்பரம் முரண்படாமல் இருத்தல்
மூலம் – இப்படிக் க்ருதக்ருத்யனான இவனுக்கு “தத்து கர்ம ஸமாசரேத்” என்று விஹிதமான கர்த்தவ்யாந்தர கைங்கர்ய அநுப்ரவிஷ்ட ஸதாசார விசேஷமென்னுமிடம், பூர்வாபர க்ரந்தங்களாலும் இச் ச்லோகந்தன்னில் அக்ரியாவதநர்த்தாய என்கையாலும் ஸித்தம். ஆகையால் மேல் பலஸித்தியில் ஸம்சயம் இல்லாமையாலும், மோக்ஷோபாயமாக ஒரு கர்த்தவ்யசேஷமில்லாமையாலும், இவனுக்கு உள்ள கர்த்தவ்யம் ஆஜ்ஞா அநுபாலநரூபமான ஸ்வயம்ப்ரயோஜனமாகையாலும், அபராத ப்ரஸக்தமானால் அதிகாராந்தரத்திற் சொன்ன கட்டளையிலே அநுதாபாதிகளாலே ஸுபரிஹரமாகையாலும் இவன் ஹ்ருஷ்டமனாவாகக் குறையில்லை. இந்த ஹர்ஷம் விவேகியாய் ஹேயமான சரீராதிகளோடே துவக்குண்டிருக்கிற இவனுக்கு நிர்வேத மிச்ரமாய் நடந்ததேயாகிலும், இந் நிர்தேசமும் இச் சோக நிவ்ருத்தியும் பிந்ந விஷயங்களாகையாலே விரோதமில்லை.
– இவ்விதம் செய்யவேண்டிய செயலான ப்ரபத்தியைச் செய்த ப்ரபந்நன் ஒருவன், ஸ்ரீலக்ஷ்மீதந்த்ரம் (17-88) - தத்து கர்ம ஸமாசரேத் – பலனை அளிக்காததும், செய்யாமல் விடுத்தால் பாபம் உண்டாக்கவல்லதும் உள்ள கர்மங்களைச் செய்தே ஆகவேண்டும் – என்று கூறுவதற்கு ஏற்ப, புண்ணியம் நிறைந்தவர்களால் கைங்கர்யத்துடன் சேர்த்துச் செய்யப்படும் கர்மங்களை, தனது வர்ணாச்ரம தர்மங்களுக்கு ஏற்ப செய்யவேண்டும். இந்தக் கருத்தானது, இந்த ஸ்ரீலக்ஷ்மீதந்த்ர ச்லோகத்திற்கு முன்பும் பின்பும் உள்ள ச்லோகங்களாலும், இந்த ச்லோகத்தாலும், “இதனைச் செய்யாவிட்டால் பாபம் ஸம்பவிக்கும்” என்று கூறுவதன் மூலம் அறியலாம். ஆகவே இனி கிட்டவுள்ள பலனைக் குறித்து எந்தவிதமான ஐயமும் இல்லை என்பதாலும், மோக்ஷத்திற்காக இனி வேறு எந்த உபாயத்தையும் கைக்கொள்ள வேண்டியதில்லை என்பதாலும், இனி செய்யவேண்டியவை அனைத்தும் பகவானின் ஆணையாக உள்ளதாகவும் அவையே பலனாக உள்ளவையாகவும் இருக்கும் கர்மங்களே ஆகும் என்பதாலும், ப்ரபத்திக்குப் பின்னர் அபசாரம் உண்டானாலும் வேறு ஒரு அத்யாயத்தில் அவற்றுக்கான ப்ராயச்சித்தம் போதுமானது என்று கூறப்பட்டதற்கு ஏற்ப அவை எளிதாக அகலக்கூடியவை என்பதாலும், ப்ரபந்நன் ஒருவன் தனது இதயத்தில் மகிழ்ந்தபடி இருப்பதில் எந்தத் தடையும் (அல்லது குறையும்) இல்லை. விவேகம் நிறைந்தவனாகவும் தாழ்ந்தவையான சரீரம் போன்றவற்றுடன் ஸம்பந்தம் கொண்டவனாகவும் உள்ள ப்ரபந்நனுக்கு, இத்தகைய மகிழ்ச்சி என்பது அவனுடைய துயரத்துடன் சேர்ந்து இருந்தாலும், “துயரம், சோகம் நீங்குதல்” ஆகிய இரண்டும் தனித்தனி விஷயங்கள் என்பதால், இரண்டும் காணப்படுவதில் எந்தவிதமான முரண்பாடும் இல்லை.