Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 146)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
அச்சம் கொண்டவன் ப்ரபத்திக்கு அதிகாரி என்பதன் கருத்து
மூலம் – இத்தாலே சோக விசேஷ ஆவிஷ்டன் ப்ரபத்திக்கு அதிகாரி என்று தோற்றாநிற்க “அஹம் பீத: அஸ்மி” என்றும், “பாவீ தழுவென மொழிவதற்கு அஞ்சி நம்பனே வந்து உன் திருவடியடைந்தேன்” என்றும் பீதனானவன் ப்ரபத்திக்கு அதிகாரி என்று சொல்லுகிறபடி என்? என்னில், கீழ் அபிமதம் ஸித்தியாதே நின்ற நிலையைப் பார்த்து சோகமும் மேல் அபிமதத்துக்குப் ப்ரதிபந்தகங்களான ப்ரபல விரோதிகளைப் பார்த்து பயமும் நடையாடுகிறதாகையாலே முமுக்ஷுவுக்கு அநிஷ்ட நிவ்ருத்தியிலும் இஷ்ட ப்ராப்தியிலும் ஒன்றைச் சொல்ல இரண்டும் வருமாப் போலே, அதிகாரத்திலும் பய சோகங்களில் ஒன்றைச் சொல்ல இரண்டும் ஸித்திக்கும். அத்யந்த அகிஞ்சநனுக்கு இப் பய சோகங்கள் இரண்டும் விஞ்சியிருக்கும். ஆகையால் இங்கு அதிசயித சோக ஆவிஷ்டனான அதிகாரி விசேஷத்துக்கு அநுகுணமான உபாய விசேஷத்தைக் காட்டி இவனை நிஸ்ஸம்சயனுமாய், நிர்பரனுமாய், நிர்பயனுமாய், ஹஷ்டமநாவுமாக்கித் தலைக்கட்டுகிறது. இவ் அதிசயித பயத்தைப் பற்ற “அஞ்சின நீ என்னை அடையென்றார் வந்தார்” என்றும் சொன்னோம்.
– இங்கு கீதை (18-66) – மா சுச: - வருத்தம் கொள்ளாதே – என்பதன் மூலம், குறிப்பிட்ட சோகத்தைக் கொண்டவன் மட்டுமே ப்ரபத்திக்கான தகுதி கொண்டவன் என்பது வெளிப்படுகிறது. ஆனால், ஜிதந்தே (1-8) - அஹம் பீத: அஸ்மி – இந்த ஸம்ஸாரத்தைக் கண்டு நான் அச்சம் கொள்கிறேன் – என்றும், பெரிய திருமொழி (1-6-4) - பாவீ தழுவென மொழிவதற்கு அஞ்சி நம்பனே வந்து உன் திருவடி அடைந்தேன் – என்றும் கூறப்படும் ப்ரமாணங்கள் மூலம், “அச்சம் கொண்டவன் ப்ரபத்திக்குத் தகுதி உள்ளவன்” என்று எப்படிக் கூறப்படுகிறது? இதனை விளக்குவோம். தான் விரும்புகின்ற இறுதியான பலன் இதுவரை கைகூடாமையால் சோகம் கொள்கிறான்; தொடர்ந்து, அந்தப் பலன் கிட்டுவதைத் தடுக்கவல்ல பல தடைகளைக் கண்டு அச்சமும் கொள்கிறான். முமுக்ஷு ஒருவனுக்கு “விருப்பமற்றவை விலகுதல், விருப்பமானவை கைகூடுதல்” ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றை உரைத்தாலே, மற்றொன்று தானாகவே வெளிப்படும்; அதே போன்று ப்ரபத்திக்கான தகுதியாக “சோகம், அச்சம்” ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உரைத்தாலே, மற்றொன்று தானாகவே வெளிப்படும். மற்ற எந்தவிதமான உபாயமும் கையில் இல்லாததால் ப்ரபத்திக்கான முழுத் தகுதியையும் அடைந்த ஒருவனுக்கு இவ்விதமாக சோகமும் பயமும் அதிகமாகவே இருக்கும். ஆகவே இந்த சரம ச்லோகத்தில், எல்லையற்ற சோகம் நிறைந்த ஒருவனுக்கு ஏற்றதான உபாயம் கூறப்பட்டது; இதன் மூலம் அவன் சந்தேகம் அற்றவனாகவும், பாரம் அற்றவனாகவும், பயம் அற்றவனாகவும், மகிழ்ச்சி நிறைந்தவனாகவும் செய்யப்படுகிறான். இங்குள்ள அதிகமான அச்சத்தைக் குறித்து, திருச்சின்னமாலையில் (8) - அஞ்சின நீ என்னை அடையென்றார் வந்தார் – என்று கூறப்பட்டது.