Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 145)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

மூலம் – உபாயாந்தர ரஹிதனானவனைக் குறித்து “மாமேகம் சரணம் வ்ரஜ” என்று விதித்த கட்டளையிலே அசக்தனானவன் சக்தன் கையிலே பரஸமர்ப்பணம் பண்ணுகையாலும் ஸ்வதந்த்ர காருணிக சேஷி பரஸ்வீகாரம் பண்ணுகையாலும் இப் ப்ரபந்நனுக்கு இச் ச்லோகத்தில் பூர்வார்த்தத்திலே நிர்பரத்வமும், ஸர்வசக்தியாய் ஸ்வீக்ருதபரனாய் ஆச்ரிதர் விஷயத்தில் ஸத்யவாதியான சேஷி “அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி” என்று அருளிச்செய்கையாலே ந்யஸ்தபரனான இவனுக்கு இனி ஆகாமி நரகாதி ப்ரத்யவாய சங்கா ப்ரஸங்கமில்லாமையாலே நிர்பயத்வமும், இச் ச்லோகம் “செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மை பெருவார்த்தை”யாகையாலே நிஸ்ஸம்சயத்வமும் பலிதம். ஆகையால் இங்கு உபாய விசேஷ அநுஷ்டானங்கள் வந்தால் உபாய அநுபந்தியாயும் வரும் சோகத்தில் ப்ராப்தியில்லை என்கிறது.

– மற்ற உபாயங்கள் அனைத்தையும் கைவிட்ட ஒருவனிடம் பகவான் கீதையில் (18-66) – மாம் ஏகம் சரணம் வ்ரஜ – என்னிடம் மட்டுமே சரணம் அடைவாயாக – என்று கூறினான்; ஆகவே தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் எந்தவிதமான முயற்சியில் ஈடுபடவும் சக்தி அற்ற அந்த ஒருவன், அப்படிப்பட்ட சக்தி கொண்ட பகவானிடம் தனது பாரத்தை ஒப்படைக்கிறான். இதனைத் தொடர்ந்து சுதந்திரமானவனும், மிகுந்த கருணை கொண்டவனும், எஜமானனும் ஆகிய பகவான், அந்த மனிதனைக் காப்பாற்றும் பொறுப்பை ஏற்கிறான். ஆகவே இந்த ச்லோகத்தின் முதல் பாதி மூலமாக, தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ளும் பொறுப்புகள் அனைத்திலிருந்தும் அந்த மனிதன் விடுதலை அடைகிறான் என்றாகிறது. அனைத்துவிதமான சக்திகளையும் கொண்டவனும், தங்களைக் காப்பாற்றும் பொறுப்பைத் தன்னிடம் ஒப்படைத்தவர்கள் விஷயத்தில் உண்மையாக நடப்பவனும், எஜமானனும் ஆகிய பகவான், கீதையில் (18-66) - அஹம் த்வா ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – அனைத்து பாபங்களிலிருந்தும் நான் உன்னை விடுவிப்பேன் – என்று அருளிச்செய்கிறான். இதன் விளைவாகத் தன்னுடைய பாரங்கள் அனைத்தையும் ஒப்படைத்த அந்த மனிதனுக்கு இனி வரும் காலத்தில் “நரகம் முதலான துன்பங்கள் உண்டாக்குமோ” என்னும் ஐயம் இல்லாத காரணத்தால், அவனுக்கு பயம் இன்மை உண்டாகிறது. மேலும் கீதையின் இந்த சரம ச்லோகமானது நாச்சியார் திருமொழி (11-10) - செம்மையுடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மை பெருவார்த்தை – என்பதற்கு ஏற்ப திருவரங்கன் அருளிச்செய்த காரணத்தால், இதில் கூறப்பட்ட விஷயங்களில் எந்தவிதமான ஐயமும் அவசியம் இல்லை. ஆகவே இத்தகைய உபாயம் குறித்து உபதேசிக்கப்பெற்ற ஒருவன், இதனைக் கைக்கொண்டால், அவன் இந்த உபாயத்தைக் குறித்து சோகம் அடையமாட்டான் என்று கருத்து.