Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 144)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
மூலம் - இப் பகவத்கீதையில் முற்பட ப்ரக்ருதி ஆத்ம விவேகத்தை உண்டாக்கிப் பின்பு பரம்பரயா மோக்ஷகாரணங்களான கர்மயோக ஜ்ஞாநயோகங்களையும் ஸாக்ஷாத் மோக்ஷ ஸாதநமாக வேதாந்த விஹிதமான பக்தியோகத்தையும் ஸபரிகரமாக உபதேசித்து, “இதி தே ஜ்ஞாநமுகாக்யாதம் குஹ்யாத் குஹ்யதரம் மயா விம்ருச்யைதசேஷேண யதேச்சஸி ததா குரு” என்று அருளிச்செய்தவாறே அர்ஜுநனுடைய முகத்தில் உருவுதலைக் கண்டருளியிருக்கச்செய்தே கடுக லகூபாயத்தை அருளிச்செய்யாதே, “பரீக்ஷாம் ச ஜகந்நாத: கரோத்யத்ருட சேதஸாம்” என்கிற கட்டளையைக் கண்டருளி நாம் “இன்னது உனக்கு ஸாக்ஷாத் மோக்ஷ ஸாதநமான பரிமஹிதம்; இத்தைப் ப்ரதாநமாகக் கணிசித்து இதுக்கு அநுரூபமாக வர்த்தி” என்று நிகமியாதே, “ஏஷ மந்தா விதர்பாணாம் ஏஷ கச்சதி கோஸலாந்” என்னுமாப்போல உபேக்ஷகத்வ சங்கை பண்ணலாம்படி “யதேச்சஸி ததா குரு” என்று சொல்லித் தலைக்கட்டினோமென்று இது வ்யாஜமாக சோகித்தானென்று பாவித்து, இன்னுமொரு நிலை ப்ரதாநமான பக்தியோகத்தை நிஷ்கர்ஷித்து உபதேசித்த பக்தியோகந்தன்னையே “ஸர்வ குஹ்யதமம் பூய:” என்று தொடங்கி இரண்டு ச்லோகத்தாலே அத்யாதரம் தோற்ற ஸப்ரத்யபிஜ்ஞமாம்படி நிஷ்கர்ஷித்து நிகமிக்க, அவ்வளவிலும் இவன் சோகம் இரட்டித்துத் தோற்றினபடியைக் கண்டருளின ஸாரதிரூபனான ஸர்வேச்வரன், “இனி இவன் அதிலகுவான மோக்ஷோபாயத்தை உபதேசிக்கைக்குப் பூர்ணபாத்ரமானான்” என்று திருவுள்ளம் பற்றி அருளிச்செய்யப்போகிற சீரிய லகூபாயத்துக்குப் ப்ரசம்ஸாரூபமாக ஒரு காலக்ஷேபம் பண்ணாதே, கடுக ஸகல பல ஸாதநமான ஸ்வவிஷய சரணாகதியை உபதேசித்து இவனுடைய மநோரதத்துக்கும் ஸாரதியாய் ஸர்வசோகத்தையும் கழிக்கிறானாகையாலே இங்கு நிவாரிக்கிற சோகம் பழைய சோகங்களில் வேறுபட்டது என்னுமிடம் ப்ரகரண பரமர்சத்தாலே ஸுவ்யக்தம்.
– ஸ்ரீமத்பகவத்கீதையில் முதலில் ப்ரக்ருதி மற்றும் ஆத்மா ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாட்டைக் குறித்த ஞானத்தை உண்டாக்குகிறான். அதன் பின்னர் மோக்ஷத்திற்கு மறைமுகமான காரணங்களாக உள்ள கர்மயோகம் மற்றும் ஞானயோகம் ஆகியவை குறித்து உரைக்கிறான். அதன் பின்னர் மோக்ஷத்திற்கான நேரடியான காரணமாக வேதாந்தங்களில் விதிக்கப்பட்டதான பக்தியோகத்தை, அதன் அங்கங்களுடன் உபதேசிக்கிறான். அதனைத் தொடர்ந்து கீதை (18-63) - இதி தே ஜ்ஞாநமுகாக்யாதம் குஹ்யாத் குஹ்யதரம் மயா விம்ருச்யைதசேஷேண யதேச்சஸி ததா குரு – இப்படியாக ரஹஸ்யங்களில் மிகவும் ரஹஸ்யமான ஞானம் என்னால் உனக்குக் கூறப்பட்டது. நீ இவை அனைத்தையும் ஆராய்ந்து நோக்கி, எவ்விதம் விரும்புகிறாயோ அவ்விதம் செய்வாயாக – என்றான். அப்போது அர்ஜுனனுடைய முகத்தில் ஒரு வாட்டத்தை க்ருஷ்ணன் கண்டான். ஆனாலும், ஸ்ரீவிஷ்ணுதர்மம் (74-89) - பரீக்ஷாம் ச ஜகந்நாத: கரோத்யத்ருட சேதஸாம் – மிகவும் பலவீனமான மனம் கொண்டவர்களுடைய செல்வங்களைப் பறித்து, அந்த நிலையிலும் அவர்கள் தன்னைக் கைவிடாமல் உள்ளனரா என்று சோதிக்கிறான் – என்னும் விதிக்கு ஏற்ப, அர்ஜுனனுக்கு க்ருஷ்ணன் சட்டென்று மிகவும் எளிதான உபாயத்தை அருளிச்செய்யவில்லை. ஆகவே பகவான் அர்ஜுனனிடம், “இதுவே உனக்கு மோக்ஷத்தை அளிக்கக்கூடிய நேரடியான உபாயம் ஆகும். இதுவே உனக்கு ஏற்றதாகும். இதனையே முதன்மையாகக் கொண்டு, இதனைப் பின்பற்றி நடப்பாயாக” என்று கூறி முடிக்கவில்லை; மாறாக, மஹாபாரதம் வனபர்வம் (50-48) - ஏஷ மந்தா விதர்பாணாம் ஏஷ கச்சதி கோஸலாந் – (நளன் தமயந்தியிடம்) இது விதர்ப்ப நாடு செல்லும் பாதை, இது கோஸல நாடு செல்லும் பாதை – என்று கூறப்பட்டது போன்று, அர்ஜுனனுடைய நன்மையில் பிடிப்பு இல்லாதவனாக உள்ளானோ என்ற ஐயம் ஏற்படும்விதமாக, “யதேச்சஸி ததா குரு - எவ்விதம் விரும்புகிறாயோ அவ்விதம் செய்வாயாக” என உரைத்து முடித்தான். இவ்விதம் அர்ஜுனனிடம் பிடிப்பு இல்லாதபடி நடந்ததால் அர்ஜுனனுக்கு சோகம் ஏற்பட்டது என்று க்ருஷ்ணன் அனைவரையும் எண்ண வைத்து, இதனையே ஒரு லீலையாகக் கொண்டு, மீண்டும் ஒருமுறை மோக்ஷ உபாயமாக உள்ள பக்தியோகத்தை உபதேசிக்கிறான். ஆகவே க்ருஷ்ணன் கீதை (18-64) - ஸர்வ குஹ்யதமம் பூய: - உயர்ந்த ரஹஸ்யத்தை நான் மீண்டும் கூறுகிறேன் – என்று தொடங்கி, அடுத்த இரண்டு ச்லோகங்களில், தான் முன்பு செய்த உபதேசமானது அர்ஜுனனுக்கு மீண்டும் நினைவுக்கு வரும்விதமான, மிகவும் ஈடுபாட்டுடன் உறுதியுடன் உபதேசம் செய்து முடிக்கிறான். அப்போது அர்ஜுனனுடைய முகத்தில் இருந்த சோகமானது முன்பைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகமானதை, தேர் ஓட்டியாக வந்த ஸர்வேச்வரன் கண்டான். ஆகவே அவன் தனது திருவுள்ளத்தில், “இப்போதுதான் இவன் மிகவும் எளிதான மோக்ஷ உபாயத்தைக் குறித்த உபதேசத்தைக் கேட்கும் முழுத் தகுதியையும் பெற்றவன் ஆனான்”, என்று தீர்மானித்தான். ஆகவே, அத்தகைய மோக்ஷ உபாயத்தைக் குறித்து புகழ்வதான சொற்களைக் கூறிக்கொண்டிருக்காமல், சற்றும் தாமதம் செய்யாமல், அனைத்துவிதமான பலன்களையும் அளிக்கவல்லதான தன்னைக் குறித்த சரணாகதியை உபதேசித்தான். இப்படியாக அர்ஜுனனுடைய மனம் என்னும் தேரையும் செலுத்துகின்ற சாரதியாக நின்று, அவனுடைய அனைத்து சோகங்களையும் போக்கினான். ஆகவே இங்கு விலக்கப்பட்ட சோகம் என்பது, முன்பு தனது உறவினர்களை இழப்போமோ என்னும் எண்ணத்தால் எழுந்த சோகத்தைக் காட்டிலும் வேறுபட்டது என்பதை இந்தப் பகுதியில் உள்ள விஷயங்கள் மூலமாகத் தெளிவாக அறியலாம்.