Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 143)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

மூலம் – இங்கு கழிக்கிற சோகம் யதாவஸ்தித ஆத்மோபதேசாதிகளாலே கழிந்த பந்து வதாதி நிமித்தமான பழைய சோகமன்று; ப்ரகரண அநுகுணமான சோகாந்தரம். எங்ஙனேயென்னில், “தைவீ ஸம்பத் விமோக்ஷாய நிபந்தாய அஸுரீ மதா” என்று பிரித்துச் சொன்னவாறே, “நாம் ஆஸுர ப்ரக்ருதிகளாகில் செய்வது என்?” என்று சோகித்த அர்ஜுநனைப் பற்ற “மா சுச: ஸம்பதம் தைவீம் அபிஜாத: அஸி பாண்டவ” என்றாற்போலே இங்கு சீரிய பலத்தில் தீவ்ரஸங்கம் நடவா நிற்க, சிரகால ஸேவ்யமாய் அந்தராய பஹுலமாய் அத்யந்தாவஹிதர்க்கும் க்ருச்ச்ர ஸாத்யமான உபாயத்தையும் தன் அளவையும் கண்டு, ‘நமக்கு இவ் உபாயம் தலைக்கட்டி எங்கே இப் பல ஸித்தி உண்டாகப் போகிறது?” என்று சோகித்த அர்ஜுநனுக்கு க்ஷணகால ஸாத்யமாய், ஸர்வ அந்தராய ரஹிதமாய் ஸுகரமான உபாயத்தைக் காட்டிக் கொடுத்து, அம்முகத்தாலே பல ஸித்தியில் நிர்பரனுமாய் நிஸ்ஸம்சயனுமாம்படி பண்ணி, “மா சுச:” என்று சொன்னால் இது உபாயாந்தர தௌஷ்கர்யாதிகளடியாகப் பிறந்த சோகத்தைக் கழிக்கிறதாமித்தனையிறே.

– இங்குள்ள “மா சுச:” என்பதன் மூலம் விலக்கப்படுகிற துக்கமானது, யுத்தம் தொடங்கியபோது தனது உறவினர்களை எப்படிக் கொல்வது என்று எழுந்ததும், ஆத்மா குறித்த உபதேசங்களால் விலகியதும் ஆகிய “உறவினர்கள் குறித்த சோகம்” அல்ல. இந்தப் பகுதியில் கூறப்படும் விஷயத்தைக் குறித்த துக்கமே இங்கு உரைக்கப்படுகிறது. எப்படி? கீதையில் (16-5) - தைவீ ஸம்பத் விமோக்ஷாய நிபந்தாய அஸுரீ மதா – தேவர்களைப் போன்ற தன்மைகள் மோக்ஷத்திற்கும், அஸுரர்களைப் போன்ற தன்மைகள் பந்தத்திற்கும் கொண்டு செல்லும் – என்று பகவான் பிரித்து உரைத்தான். இதனைக் கேட்ட அர்ஜுனன், “நான் அஸுரத் தன்மைகள் கொண்டவனாக இருந்தால் என்ன செய்வது?”, என்று எண்ணி சோகம் கொண்டான். இதனை உணர்ந்த பகவான், “மா சுச: ஸம்பதம் தைவீம் அபிஜாத: அஸி பாண்டவ – பாண்டவனே! நீ தேவர்களைப் போன்ற தன்மைகள் அடையவே பிறந்தாய். ஆகவே வருந்தாதே” என்றான். இதனைப் போன்றே மோக்ஷம் அடைவதில் விருப்பம் கொண்டவனாக நின்ற அர்ஜுனன், இங்கு பகவான் உபதேசம் செய்த உபாயத்தை நீண்டகாலம் கைக்கொள்ளவேண்டும் என்றும், அதற்கும் பல தடைகள் உண்டாகும் என்றும், மிகவும் கவனத்துடன் உள்ளவர்களுக்கும் கூடக் கடினமாக இருப்பதாகும் என்றும், மிகவும் சிரமத்துடன் செய்யவேண்டியதான இந்த உபாயத்தைக் குறித்து சோகம் கொண்டான். அந்த உபாயத்தில் உள்ள சிரமத்தையும், தனது தகுதியையும் குறித்துச் சிந்தித்து, “எனக்கு இந்த உபாயம் கைகூடி, எவ்விதம் பலனை அளிக்க இயலும்?”, என்று எண்ணி சோகம் அடைந்தான். அப்போது பகவான் ஒரு நொடிப்பொழுதில் செய்யக்கூடியதும், எந்தவிதமான தடையும் இல்லாததும், மிகவும் எளிதானதும் ஆகிய மற்றொரு உபாயத்தைக் காண்பித்துக் கொடுத்தான். இதன் மூலமாக அர்ஜுனன் மோக்ஷ உபாயத்தைக் குறித்து பாரம் அற்றவனாகவும், சந்தேகம் அற்றவனாகவும் ஆகும்படிச் செய்து, “மா சுச: - வருத்தம் கொள்ளாதே” என்றான். ஆகவே இங்கு கூறப்பட்ட சொற்களானவை முதலில் கூறப்பட்ட மற்ற உபாயங்களைக் கைக்கொள்வதில் ஏற்படக்கூடிய துக்கத்தை விலக்குவதாகவே உள்ளது என்று கருத்து.