Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 142)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

மூலம் - “அபிமத பலத்துக்கு துஷ்கர ஸாதநமுமன்றிக்கே ஸர்வ விரோதி நிவர்த்தந க்ஷமமுமாய்ப் பல விளம்பமுமின்றிக்கேயிருக்கிற இவ்வுபாய விசேஷம் உபதிஷ்டமான பின்பு உபாய தௌஷ்கர்யாதிகளடியாக உனக்கு சோகிக்கப் ப்ராப்தியில்லை. இவ்வுபாயம் அநுஷ்டித்தால் உன் கார்யம் எனக்கு பரமாய் நானே பலியுமாய் உன்னை ரக்ஷியாதபோது எனக்கு அவத்யமாம்படியிருக்கும் தசையிலும் தநாதி துல்யனான உனக்கு சோகிக்கப் ப்ராப்தியுண்டோ” என்று திருவுள்ளம்.

– இங்கு ஸர்வேச்வரனுடைய திருவுள்ளமானது, “சேதநனாகிய உனக்கு விருப்பமான பலனைப் பெறுவதற்காக நீ செய்யவேண்டிய கடினமான உபாயமாக இல்லாமலும், மிகவும் எளிதாக இருப்பதும், அனைத்து தடைகளையும் நீக்கவல்லதும், காலம் தாழ்ந்து பலன் அளிக்காமல் உடனே பலன் அளிக்கவல்லதும் ஆகிய ப்ரபத்தி என்னும் இந்த உபாயம், என்னால் உனக்கு உபதேசம் செய்யப்பட்ட பின்னர் நீ சோகம் கொள்வதற்கு அவசியமே இல்லை. இந்த உபாயத்தை நீ கைக்கொண்ட பின்னர் உனக்கான பலனை அளித்தல் என்பது என்னுடைய பொறுப்பாகிறது. அத்தகைய பலனை அடைபவனும் நானே ஆகிறேன். உன்னைக் காக்கவில்லையென்றால் எனக்குக் கேடு உண்டாகும் என்றுள்ளபோது, என்னால் காப்பாற்றப்படும் செல்வத்தின் இடத்தில் உள்ள உனக்குத் துக்கம் கொள்ளும் நிலை உள்ளதோ?”, என்பதே ஆகும்.