Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 139)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
“மா சுச:” என்பது விதிமுறை அல்ல
மூலம் – சிலர் “மா சுச:” என்கிறவிது விதியாகையாலே ப்ரபந்நனான பின்பு சோகிக்கை வித்யதிலங்கனமாய் இவனை உபாயபூதனான சரண்யன் நெகிழ்ந்து தன் கார்யத்துக்குத் தானே கடவனாகையாகிற ப்ரத்யவாயமுண்டாம் என்று சொன்னவிடம் புத்திபூர்வ உத்தராகத்தையும் “ஸர்வ பாபேப்ய:” என்கிறவிடத்திலே கூட்டித் தாங்களே பண்ணின வ்யாக்யானத்துக்கும், “ப்ரபந்நனை சரண்யன் ஒருபடியாலும் கைவிடான்” என்கிற வாக்கியங்களுக்கும் விருத்தமாம். ஆகையால் இவ்வுபாயத்தில் இழியுமவனுக்கு சோக ஹேதுக்களெல்லாம் கழிகையாலே சோகிக்க வேண்டா என்னுமிடத்தைச் சொல்லிக் கொண்டு விச்வாஸத்தை த்ருடீகரிக்கையிலே தாத்பர்யம்.
– ஒரு சிலர் “மா சுச: - வருத்தம் அடையாதே” என்பது, தவிர்க்கப்பட வேண்டிய செயலை விதிப்பதாகும் என்று கூறுகிறார்கள். அவர்களுடைய கருத்தின்படி, “ப்ரபத்திக்குப் பின்னர் ஒருவன் எந்த விஷயத்திற்கும் வருத்தம் அடைதல் கூடாது. அவ்வாறு வருந்துதல் என்பது ப்ரபத்தி விதிமுறைக்கு விரோதமாக உள்ளதால், உபாயமாக உள்ள ஸர்வேச்வரன் தனது திருவுள்ளத்தை மாற்றிக் கொள்கிறான். இதன் காரணமாக வருத்தம் அடைந்த ப்ரப்பந்நன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளட்டும் என்று கைவிடுகிறான்”, என்பதாகும். இந்தக் கருத்தானது, “தன்னைச சரணம் புகுந்தவர்களை ஸர்வேச்வரன் ஒருநாளும் கைவிடமாட்டான்” என்று கூறுகின்ற ப்ரமாணங்கள் அனைத்திற்கும் முரணானது ஆகும். ஆகவே, “மா சுச:” என்பது, இந்த உபாயத்தைக் கைக்கொண்ட ஒருவனுக்கு, துக்கம் உண்டாகக் காரணமாக உள்ள அனைத்தும் விலகுவதால் அவன் சோகம் அடையவேண்டாம் என்று உரைத்து, அவனுடைய நம்பிக்கை உறுதியாக்குவதில் மட்டுமே நோக்கம் கொண்டதாகும்.