Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 137)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
முக்தி நிலையில் உண்டாகும் ஞான மலர்ச்சியின் மேன்மை
மூலம் – இக் கதிவிசேஷத்துக்கு முன்பு சாஸ்த்ரத்தாலே ப்ரஹ்ம ஸ்வரூபத்தை அறிகிறபோதும் யோகத்தாலே ஸாக்ஷாத்கரிக்கிறபோதும் விபவ லோகாதிகளில் ப்ராபிக்கும்போதும் பிறக்கும் ப்ரகாசம் ஸக்ருதாதீநமாய்க் கரணாயத்தமாய் வருகிறதாகையாலே பரிமிதமுமாய் விச்சேதவத்துமாய் இருக்கும். முக்ததசையில் பிறக்கிற ப்ரகாசம், ஸங்கோச விச்சேதங்களுக்குக் காரணம் ஒன்றும் இல்லாமையாலே பரிபூர்ண விஷயமுமாய்ப் புநர்விச்சேத ரஹிதமுமாய் இருக்கும். இவ் அநுபவ பரீவாஹமாய் “க்ரியதாமிதி மாம் வத” என்கிறபடியே சேஷி உகந்த பரிபூர்ண கைங்கர்யம் வருகிறது. “பாரமார்த்திக” என்கிற கத்ய வாக்யத்திற்சொன்ன பலபர்வ பரம்பரையெல்லாம் இங்கே யதா ப்ரமாணம் விவக்ஷிக்கப்படுகின்றன.
– அர்ச்சிராதி மார்க்கமாக ஒருவன் செல்வதற்கு முன்பாக, அவன் சாஸ்த்ரங்கள் மூலமாக ப்ரஹ்ம ஸ்வரூபத்தைக் குறித்து அறிகிறான், தனது யோகத்தால் ப்ரஹ்மத்தை நேரடியாகவே உணர்கிறான், விபவ லோகங்களில் சஞ்சரிக்கிறான். இவற்றின் விளைவாக அவனுக்கு ஏற்படுகின்ற ப்ரகாசமானது, அந்தச் செயல்கள் காரணமாகவே உள்ளதாகவும், அவனுடைய ஞானேந்த்ரியங்களை நம்பி உள்ளதாகவும் இருப்பதால், அந்த ப்ரகாசமானது அளவுடன் கூடியதாகவும், எளிதில் மாறுவதாகவும் இருக்கும். ஆனால், முக்தி அடைந்த நிலையில் கிட்டும் ப்ரகாசம் என்பது, சுருக்கம் மற்றும் மலர்ச்சி ஆகியவற்றுக்கு இடம் இல்லை என்பதால், பரிபூர்ணமாகவும் முழுமையானதாகவும் மாற்றங்களுக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கும். இத்தகைய அனுபவமானது அளவற்று உள்ளபோது, இராமாயணம் ஆரண்யகாண்டம் (15-7) - க்ரியதாமிதி மாம் வத – லக்ஷ்மணன் இராமனிடம், “இதனைச் செய் என்று எனக்கு நீ கூறுவாயாக” – என்று கூறுவதற்கு ஏற்ப எஜமானனுக்கு மகிழ்வு ஏற்படும்விதமாக உள்ள பர்பூர்ணமான கைங்கர்யம் உண்டாகிறது. சரணாகதி கத்யத்தில், “பாரமார்த்திக” என்று தொடங்கி கூறப்படும் பலன்களின் தொடர்ச்சி அனைத்தும், இங்கு தகுந்த ப்ரமாணம் மூலம் கூறப்படுவதாகவே உள்ளன.