Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 136)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
ஜீவாத்மாவை மட்டுமே உபாஸிப்பவனுக்கு மோக்ஷம் இல்லை
மூலம் - இப்படி இங்கு ஸர்வ பாப நிவ்ருத்தியைச் சொல்லுகையாலே கேவல ஆத்ம அநுபவத்துக்குக் காரணமாய் பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவத்துக்குப் ப்ரதிபந்தகமான கர்மவிசேஷமும் கழிகையாலே “மாமேவைஷ்யஸி” என்று கீழ் ச்லோகத்திற் சொன்ன அர்த்தம் இங்கும் ஸித்தமாயிற்று. “மாமேவைஷ்யஸி” என்கிற ப்ராப்தியாவது பரிபூர்ணாநுபவம். இப் பரிபூர்ண அநுபவ ஸித்திக்காக அர்ச்சிராதிகதியும் தேசவிசேஷ ப்ராப்தியுமுண்டாகிறது. இக் க்ரமத்திலே இவ் அநுபவம் கொடுப்பதாக ஸ்வதந்த்ரன் அநாதியாக நியமித்து வைத்தான் என்னுமிடம் இக் கதி விசேஷாதிகளைப் ப்ரதிபாதிக்கிற சாஸ்த்ரங்களாலே ஸித்தம்.
– இவ்விதமாக இங்கு அனைத்து பாபங்களும் நீங்குதல் குறித்துக் கூறப்படுவதால், ஆத்மாவை மட்டுமே அனுபவித்தல் என்பதற்குக் காரணமாகவும், முழுமையான ப்ரஹ்ம அனுபவம் ஏற்படுவதற்குத் தடையாக உள்ளதாகவும் இருப்பதான கர்மங்கள் அனைத்தும் கழிவதால், கீதை (18-65) – மாமேவைஷ்யஸி – இதனையே உண்மை என்று உனக்கு நான் உறுதியாகக் கூறுகிறேன் – என்னும் கருத்து இந்த ச்லோகத்திலும் வெளிப்படுகிறது. கீதை (18-65) – மாமேவைஷ்யஸி – என்னும் நிலையை அடைதல் என்பது முழுமையான ப்ரஹ்ம அனுபவம் ஆகும். இத்தகைய “முழுமையான ப்ரஹ்ம அனுபவம்” கிட்டுவதற்காகவே அர்ச்சிராதி மார்க்கம் மற்றும் பரமபதத்தை அடைதல் ஆகிய இரண்டும் ஏற்படுகிறது. “இப்படிப்பட்ட வரிசையில் இத்தகைய ப்ரஹ்ம அனுபவத்தை அளிக்கவேண்டும் என்பதாகவே ஸர்வேச்வரன் நியமனம் செய்துள்ளான்” என்பதை, இத்தகைய அர்ச்சிராதி மார்க்கம் மற்றும் பரமபதம் ஆகியவற்றைக் குறித்துக் கூறுகின்ற சாஸ்த்ரங்களால் அறியலாம்.