Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 135)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
ஜீவாத்மாவை மட்டுமே உபாஸிப்பவனுக்கு மோக்ஷம் இல்லை
மூலம் – பஞ்சாக்நி வித்யாதிகளிற் சொன்ன ப்ரஹ்மாத்மக ஸ்வாத்ம அநுஸந்தாநம் பண்ணுவார்க்கு பாஷ்யாதிகளிலே அர்ச்சிராதிகதியும் ப்ரஹ்ம ப்ராப்தியும் சொல்லப்பட்டது. ஆகையால் இப் பஞ்சாக்நி வித்யா நிஷ்டர்க்கு ஆத்ம மாத்ர அநுபவ ரூபமான அவாந்தர பலம் வந்தாலும், மதுவித்யா ந்யாயத்தாலே ப்ரஹ்ம ப்ராப்தி பர்யந்தமாய்விடும். ப்ரக்ருதி ஸம்ஸ்ருஷ்டமாயாதல் ப்ரக்ருதி வியுக்தமாயாதல் இருக்கும் ஆத்ம வஸ்துவை, ஸ்வரூபேணவாதல் ப்ரஹ்மத்ருஷ்டியாலேயாதல் பண்ணும் அநுஸந்தாநங்கள் நாலுக்கும் நாமாதி உபாஸநங்களுக்குப் போலே, அர்ச்சிராதிகதியும் ப்ரஹ்ம ப்ராப்தியுமில்லை என்னுமிடத்தை, “அப்ரதீகாலம்பநாந் நயதீதி பாதராயண உபயதா ச தோஷாத் தத் க்ரதுச்ச” என்கிற ஸூத்ரத்திலே அருளிச்செய்தார். “ச்ருதோபநிஷத்க கத்ய பிதாநாச்ச” என்கிற ஸூத்ரத்திலும் ஒரு வித்யா விசேஷத்தில் உபாஸ்யன் பரமாத்மா என்கைக்கு அர்ச்சிராதிகதி சொன்னதை ஹேதுவாகக் கொண்டு ஸாதிக்கையாலே, ஜீவ மாத்ர உபாஸகனுக்கு அர்ச்சிராதிகதியில்லை என்னுமிடம் ஸித்தமாயிற்று. ஆகையால் ப்ரஹ்ம ப்ராப்தியில்லாதார்க்கு இச் ச்லோகத்திற் சொல்லுகிற “ஸர்வ பாப” நிவ்ருத்தியில்லை. ஸர்வ பாப நிவ்ருத்தியுடையார்க்கு ப்ரஹ்மாநுபவ ஸங்கோசமில்லை.
– பஞ்சாக்னி வித்யைகளில் கூறப்பட்டதாகிய “தங்களுடைய ஆத்மாவின் அந்தராத்மாவாக ப்ரஹ்மம் உள்ளது” என்று தங்கள் ஆத்மாவை எண்ணியபடி உள்ளவர்களுக்கு, அவர்களுடைய உயிர் பிரிந்த பின்னர், அர்ச்சிராதி மார்க்கமாகச் செல்லுதல் மற்றும் ப்ரஹ்மத்தை அடைதல் ஆகியவை உள்ளதாக ஸ்ரீபாஷ்யம், கீதாபாஷ்யம் முதலானவற்றில் கூறப்பட்டது. ஆகவே பஞ்சாக்னி வித்யையில் ஈடுபட்டபடி உள்ளவர்களுக்கு, அவர்கள் தங்களுடைய ஆத்மாவை மட்டுமே அனுபவித்தபடி இருத்தல் என்பதன் விளைவாக நடுவில் சிறிதளவு உண்டாகக்கூடிய பலன்கள் ஏற்பட்டாலும், மதுவித்யை ந்யாயம் (மதுவித்யையின்போது சிறிது காலம் வஸுவாக இருத்தல்) காரணமாக, அவர்களுக்கு ப்ரஹ்மத்தை அடைதல் என்பது உறுதியாகக் கைகூடும். ஒரு சிலர், ப்ரக்ருதியுடன் ஸம்பந்தம் கொண்டுள்ளது என்றோ அல்லது ப்ரக்ருதியிடமிருந்து விடுபட்டுள்ளது என்றோ உள்ளதான தங்களுடைய ஆத்மாவை, அதன் ஸ்வரூபத்தையோ அல்லது அதனையே ப்ரஹ்மம் என்றோ எண்ணியபடி இருக்கக்கூடும். இத்தகைய நான்குவிதமான உபாஸனங்கள், பெயர் முதலானவற்றை உபாஸனம் செய்வதன் மூலம் அர்ச்சிராதிகதியும் ப்ரஹ்மத்தை அடைதலும் எவ்விதம் நிகழாதோ, அதனைப் போன்றே செய்யவல்லவை ஆகும். இதனை ப்ரஹ்மஸூத்ரம் (4-3-14) - அப்ரதீகாலம்பநாந் நயதி இதி பாதராயண: உபயதா ச தோஷாத் தத்க்ரது: ச - ப்ரஹ்மத்தின் அவயவமான சித் மற்றும் அசித்துக்களை பேறாகக் கொண்டு உபாஸிக்காதவர்கள் தவிர உள்ள மற்றவர்களையே அர்ச்சிராதி மார்க்கமாக அழைத்துச் செல்கின்றனர் என்று பாதராயணர் கருதுகிறார். இவ்விதம் கூறாமல் உள்ள மற்ற இரண்டு வாதங்களிலும் தோஷங்கள் உள்ளன. இதனையே தத்க்ரது ந்யாயம் கூறுகிறது – என்பதில் அருளிச்செய்தார். மேலும், ப்ரஹ்மஸூத்ரம் (1-2-17) - ச்ருத உபநிஷத்க கத்யபிதாநாத் ச - பரமாத்மாவைக் குறித்து உண்மை அறிவு உள்ளவன், எப்போதும் எண்ணியபடி இருத்தல் வேண்டும் என்று அர்ச்சிராதிகதியைக் கூறுவதால், கண்ணில் உள்ளவன் பரமபுருஷனே ஆவான் – என்று மற்றொரு வித்யை விஷயத்தில், “உபாஸிக்கப்பட வேண்டியவன் பரமாத்மாவே ஆவான்” என்பதை அங்கு அர்ச்சிராதி மார்க்கம் குறித்துக் கூறுவதன் காரணமாக உரைப்பதால், ஜீவாத்மாவை மட்டுமே உபாஸிப்பவனுக்கு அர்ச்சிராதி மார்க்கம் இல்லை என்பது தெளிவாகிறது. ஆகவே ப்ரஹ்மத்தை அடையாதவர்களுக்கு, கீதை (18-66) – ஸர்வ பாப – அனைத்து பாபங்களிலிருந்தும் – என்பதான பாபங்கள் விலகுதல் இல்லை. ஆனால் பாபங்கள் அனைத்திலிருந்தும் விலகப்பெற்றவர்களுக்கு, ப்ரஹ்ம அனுபவத்தில் சுருக்கம் ஏற்படுவதில்லை.