Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 134)
ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்
கைவல்யம் நித்யமானதும் அல்ல, மோக்ஷமும் அல்ல
மூலம் – கேவல ஆத்ம அநுபவம் நித்யமன்று என்னுமிடமும், ஸாக்ஷாந் மோக்ஷமன்று என்னுமிடமும் “சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ச்ருதா: | தேஷாமேகாந்திந: ச்ரேஷ்டா: தே சைவாநந்யதேவதா: || அஹமேவ கதிஸ்தேஷாம் நிராசீ: கர்மகாரிணாம் | யே து சிஷ்டாத்ரயோ பக்தா: பலகாம ஹி தே மதா: || ஸர்வே ச்யவநதர்மாண: ப்ரதிபுத்தஸ்து மோக்ஷபாக்” என்கிற வசநத்தாலே ஸித்தம். “முச்யேதார்த்தஸ்ததா ரோகாத் ச்ருத்வேமாமாதித: கதாம் | ஜிஜ்ஞாஸுர்லபதே பக்திம் பக்தோ பக்தகதிம் லபேத் ||” என்கையாலே ஸ்ரீகீதையில் “ஜிஜ்ஞாஸு” என்கிற ஆத்மநிஷ்டனும் க்ரமேண ஜ்ஞாநியாமென்று உக்தமாயிற்று. “மன்னுறில்” என்று பகவதநுபவத்தை நித்யம் என்கையாலும், இதுக்கு வ்யவச்சேத்யமாகச் சொல்லும் ஆத்ம மாத்ராநுபவம் நித்யமன்று என்னுமிடம் வ்யஞ்ஜிதம். இதுக்கு “இறுதி கூடா” இத்யாதிகளில் நாசமில்லை என்கிற பாசுரமும் சாதுர்பாஸ்யாதி கர்மபல விசேஷங்களில் அக்ஷய்யத்வோக்தி போலே “எனையூழி” என்கிற அதிசிரகால ஸ்தாயித்வ அபிப்ராயம். “யோகிநாம் அம்ருதம் ஸ்தாநம் ஸ்வாத்ம ஸந்தோஷ காரிணாம்” என்று இவ் ஆத்மாநுபவ ஸ்தாநவிசேஷமும் சொல்லப்பட்டது. இஸ் ஸ்தாந விசேஷம் பரமபதமன்று என்னுமிடம் இப் ப்ரகரணந் தன்னிலே “ஏகாந்திந: ஸதா ப்ரஹ்ம த்யாயிநோ யோகிநோ ஹி யே | தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் யத்வை பச்யந்தி ஸூரய:” என்று பகவத் ப்ராப்தி காமனான பரமைகாந்திக்கு ஸூரித்ருச்யமான ஸ்தாநாந்தரம் சொல்லுகையாலே ஸித்தம்.
– ஆத்ம அனுபவம் மட்டுமே என்பதான கைவல்யமானது நித்யமானதும் அல்ல மற்றும் மோக்ஷமும் அல்ல என்பதை மஹாபாரதம் சாந்திபர்வத்தில் - சதுர்விதா மம ஜநா பக்தா ஏவ ஹி தே ஸ்ம்ருதா: ஏஷாமேகாந்திந: ச்ரேஷ்டா: தே சைவாநந்யதேவதா: அஹமேவ கதிஸ்தேஷாம் நிராசீ: கர்மகாரிணாம் யே து சிஷ்டாத்ரயோ பக்தா: பலகாம ஹி தே மதா: ஸர்வே ச்யவநதர்மாண: ப்ரதிபுத்தஸ்து மோக்ஷபாக் – என்னுடைய பக்தர்கள் நான்கு வகை ஆவர்; அவர்களில் என்னைத் தவிர மற்ற தேவதைகளை நாடாமல் உள்ளவர்களே சிறந்தவர்கள்; அவர்கள் தங்களுடைய கர்மங்களை எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்கின்றனர்; என்னை அடைவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்; மற்ற மூவரும் உலகவிஷயங்களைப் பலனாக எதிர்பார்ப்பதால், நழுவ வாய்ப்புள்ளது; என்னை மட்டுமே வணங்கியபடி உள்ள புத்திமான் மோக்ஷம் பெறுகிறான் – என்னும் வாக்கியத்தால் அறியலாம். மஹாபாரதம் சாந்திபர்வத்தில் (348-81) - முச்யேதார்த்தஸ்ததா ரோகாத் ச்ருத்வேமாமாதித: கதாம் ஜிஜ்ஞாஸுர்லபதே பக்திம் பக்தோ பக்தகதிம் லபேத் – தொடக்கம் முதல் இதனைக் கேட்பதால், செல்வத்தை இழந்த ஒருவன், அந்தத் துன்பத்திலிருந்து விடுபடுவான்; ஆத்ம அனுபவத்தை விரும்புபவன் பக்தியை அடைகிறான்; பக்தியோகத்தில் உள்ளவன் மோக்ஷம் அடைகிறான் – என்று கூறுவதால், கீதையில் (7-16) – ஜிஜ்ஞாஸு – என்று கூறப்படும் ஆத்மநிஷ்டனும் நாளடைவில் ஞானியாகிறான் என்பது கூறப்பட்டதாகிறது. திருவாய்மொழி (1-2-5) – மன்னுறில் – என்னும் பாசுரத்தால் பகவத் அனுபவத்தை நித்யமானது என்று கூறுவதாலும், இது ஏற்படுவதற்குத் தடுக்கப்படவேண்டியதாகக் கூறப்படும் “ஆத்மாவை மட்டுமே அனுபவித்தல்” என்பது நித்யமானது அல்ல என்று கூறுவதாலும் இக்கருத்து உணர்த்தப்படுகிறது. மேலும் இதற்கு திருவாய்மொழி (6-9-10) - இறுதிகூடா – என்பது போன்ற பாசுரங்களில் ஆத்ம அனுபவத்திற்கு அழிவில்லை என்ற கருத்தானது, சாதுர்மாஸ்யம் என்பது போன்றதான கர்ம பலன்களுக்கு அழிவில்லை என்று கூறப்பட்டது போன்று, அவைகள் திருவாய்மொழி (6-9-10) – எனையூழி – என்பதற்கு ஏற்ப நீண்டகாலங்கள் அழியாதவையாக உள்ளன என்றே ஆகிறது (நித்யமானது அல்ல). ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-6-38) - யோகிநாம் அம்ருதம் ஸ்தாநம் ஸ்வாத்ம ஸந்தோஷ காரிணாம் – யோகிகளுக்கு “அம்ருதம்” எனப்படும் இடமே ஆத்ம அனுபவத்தில் ஈடுபட்டு மகிழ்வதற்கு ஏற்றதாக உள்ளது – என்பதன் மூலம், இத்தகைய ஆத்ம அனுபவம் கிட்டுகின்ற இடம் குறித்துக் கூறப்பட்டது. ஆனால் இத்தகைய இடமானது பரமபதம் அல்ல என்பதை, இதே பகுதியில் உள்ள ஸ்ரீவிஷ்ணுபுராணம் (1-6-39) - ஏகாந்திந: ஸதா ப்ரஹ்ம த்யாயிநோ யோகிநோ ஹி யே | தேஷாம் தத் பரமம் ஸ்தாநம் யத்வை பச்யந்தி ஸூரய: - ப்ரஹ்மத்தை மட்டுமே எப்போதும் த்யானித்தபடி உள்ள யோகிகள் அடையும் இடமானது, நித்யஸூரிகள் எப்போதும் அனுபவித்தபடி உள்ள பரமபதம் ஆகும் – என்னும் வாக்கியம் மூலம், பகவானை அடைதல் என்பதை மட்டுமே விரும்பியபடி உள்ள பரமைகாந்திக்கு, நித்யஸூரிகள் எப்போதும் பார்த்தபடி உள்ள இடமே ஏற்ற இடம் என்று கூறப்படுவதால் அறியலாம்.