Srimad Rahasyatrayasaram - ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம் (பத்தி 133)

ஸம்ப்ரதாய ப்ரக்ரியா பாகம் – 29.சரம ச்லோக அதிகாரம்

பகவானை அடைதல் என்பதைக் கைவல்யம் என்றும், கைவல்யத்தை மோக்ஷம் என்றும் கூறுவதன் காரணம்

மூலம் – பகவத் ப்ராப்தியில் கைவல்ய சப்தம் ஸர்வோபாதி நிவ்ருத்தியை நினைக்கிறது. ஆத்ம மாத்ர அநுபவ விஷயமாக “ஸ்வாத்மாநுபூதிரிதி யா கில முக்திருக்தா” இத்யாதிகளில் ப்ரயுக்தமான முக்தி சப்தமும், “விகதேச்சா பய க்ரோதோ ய: ஸதா முக்த ஏவ ஸ:” இத்யாதிகளிற்போலே நிர்வாஹம். “ஜரா மரண மோக்ஷாய” என்றதுவும் தேவர்களுடைய அபரத்வ வ்யபதேசம் போலே அபேக்ஷிகம்; க்ரமேண முக்தி பர்யந்தமாம் விஷயத்தைப் பற்றச் சொல்லுகிறதாகவுமாம். இப்படி விபவ வ்யூஹ ஸாலோக்யாதி மாத்ரத்தில் முக்தி சப்தமும் நிர்வாஹம். “லோகேஷு விஷ்ணோர் நிவஸாந்தி கேசித் ஸமீபம்ருச்சந்தி ச கேசிதந்யே அந்யே து ரூபம் ஸத்ருசம் பஜந்தே ஸாயுஜ்யமந்யே ஸ து மோக்ஷ உக்த:” என்று நியமிக்கப்பட்டதிறே. இதிற் சொன்ன ஸாயுஜ்யம் பரமபதத்திற் சென்றவனுடைய போக ஸாம்யமாம்.

“பகவானை அடைதல்” என்பதும் சில இடங்களில் “கைவல்யம்” என்று கூறப்படுகிறது; இதன் காரணம் முக்தி பெற்ற நிலையில் அனைத்து தடைகளும் விலகுவதால் ஆகும். ஸ்ரீவரதராஜ ஸ்தவம் (81) – ஸ்வாத்ம அநுபூதி: இதி யா கில முக்திருக்தா – ஆத்ம அனுபவம் என்பதான இந்த முக்தியையும் – என்பது போன்ற இடங்களில், ஆத்ம அனுபவத்தை முக்தி என்னும் சொல்லால் கூறுவது, கீதை (5-28) - விகதேச்சா பய க்ரோதோ ய: ஸதா முக்த ஏவ ஸ: - ஆசை, பயம், கோபம் ஆகியவை நீங்கப் பெற்றவனாக மோக்ஷத்தில் மட்டுமே ஆசை கொண்டவனாக ஆத்மாவைப் பார்ப்பதில் நோக்கம் உள்ள ஒருவன் – என்று கூற்வது போன்றே ஆகிறது. கீதை (7-29) - ஜரா மரண மோக்ஷாய – (கைவல்யம் என்பது) வயோதிகம் மற்றும் மரணத்திலிருந்து மோக்ஷம் – என்று கூறுவதும், (அமரர்கள் அல்லாத) தேவர்களை, அமரர்கள் என்று கூறியிருப்பது போன்றே ஆகும். அல்லது கைவல்யம் என்பதும் படிப்படியாக முக்தி நிலைக்கு இட்டுச் செல்லும் என்று கூறுவதாகவும் கொள்ளலாம். இவ்விதமாகவே விபவம், வ்யூஹம், ஸாலோக்யம் ஆகிய லோகங்களை அடைவதும் முக்தி என்னும் சொல்லால் கூறப்பட்டது என்று கருத்து. ஸ்ரீமத் பாகவதம் - லோகேஷு விஷ்ணோர் நிவஸாந்தி கேசித் ஸமீபம்ருச்சந்தி ச கேசிதந்யே அந்யே து ரூபம் ஸத்ருசம் பஜந்தே ஸாயுஜ்யமந்யே ஸ து மோக்ஷ உக்த: - ஸர்வேச்வரனை உபாஸனை செய்தவர்களில் சிலர் அவனுடைய லோகத்திலேயே வஸிக்கின்றனர் (ஸாலோக்யம்), ஒரு சிலர் அவனுக்கு மிகவும் அருகில் வஸிக்கின்றனர் (ஸாமீப்யம்), ஒரு சிலர் அவனுக்குச் சமமான ரூபம் பெறுகின்றனர் (ஸாரூப்யம்), சிலர் எம்பெருமானுக்குச் சமமான இன்பங்களை அனுபவிக்கின்றனர் (ஸாயுஜ்யம்); இந்த ஸாயுஜ்யம் என்பதே மோக்ஷமென்றும் கூறப்படும் – என்று கூறப்பட்டது. இதில் கூறப்பட்டதான ஸாயுஜ்யம் என்பது பரமபதத்திற்கு செல்லும் ஒருவன், பகவானைப் போன்றே ஆனந்தத்துடன் உள்ளான் என்னும் நிலையாகும்.